Skip to main content

இலங்கை ஊடகங்களில் செய்தி துருவப்படுத்தல் போக்குகள் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணியை மையப்படுத்திய ஆய்வு

 இலங்கை ஊடகங்களில் செய்தி துருவப்படுத்தல் போக்குகள்

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணியை மையப்படுத்திய ஆய்வு 

அருள்கார்க்கி






பல்லின நாடொன்றாக இலங்கை வரலாறு நெடுகிலும் பல கசப்பான அனுபவங்களை கொண்டுள்ளது. இனங்களுக்கிடையிலான குரோதங்கள், மொழிகளுக்கிடையிலான சமத்துவமின்மை, மத ரீதியான பாகுபாடுகள், கலாசார நம்பிக்கை அடிப்படையிலான புரிதல்களின் போதாமை என்பன ஒருமித்த நாடாக இலங்கை உருவாவதை சவாலுக்குட்படுத்தும் கருத்தியல்களாகும். இவ்வாறான பிரிவினைச் சிந்தனைகளுக்கு மக்களை இசைவாக்கம் அடையச் செய்திருப்பதில் பல்வேறு அகக்காரணிகளும், புறக்காரணிகளும் ஒவ்வொரு இனத்துக்குள்ளேயும் காணப்படுகின்றன. அரசியல், சமூக ரீதியாக பல்வேறு புறக்காரணிகள் காணப்படும் அதேவேளை இனங்களின் போக்குகளையும் நடத்தையையும் தீர்மானிக்கும் அகக்காரணிகள் பெரிதும் விரிவடைந்துள்ளன. சமூக ஊடகங்களின் வியாபகம், நுகர்வுக் கலாசாரம் என்பனவும் மக்களின் சிந்தனையை தாம் விரும்பும் திசைக்கு திருப்பக்கூடிய வகையில் பல்வேறு உத்திகளை கையாள்கின்றன. 

அதில் முக்கியமானது ஊடகங்கள் எவ்வாறு செய்திகளுக்கூடாக மக்களை துருவப்படுத்துகின்றன என்பது. காரணம், இன்றைய சமூக ஊடக கலாசாரத்தில் மக்கள் அதிகமாக ஊடகங்களில் தங்கியிருக்கக்கூடிய சந்தர்ப்பத்தில் இன, மத, பண்பாட்டு ரீதியாக தமிழர்களையும், சிங்களவர்களையும் இரு துருவங்களாக ஆக்கும் போக்கை இலங்கை ஊடகங்களும் கடைப்பிடிக்கின்றனவா? அவை எவ்வாறு செய்திகளினூடாக அவற்றைச் செய்கின்றன? 


ஒவ்வொரு ஊடகங்களும் தமது செய்தி அறிக்கையிடலில் எத்தைகைய செய்திக்கோணத்தை, சொல்லாட்சியை, கொண்டிருக்கின்றன என்பதைப் பொறுத்து அவை தமது மக்களின் நோக்கை எவ்வாறு கூர்மைப்படுத்துகின்றன என்பதை அறியமுடியும். அந்த கூர்மைப்படுத்தலூடாக துருவப்படுத்தல் நடந்தேறுகிறது. அந்தவகையில் இவ்வருடத்தின் ஆரம்பத்தில் இடம்பெற்ற ஒரு சம்பவமான 'பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியை' எடுத்துக் கொள்ளலாம். இப்பேரணியானது தமிழ் பேசும் சமூகங்களின் ஒட்டுமொத்த சமகால பிரச்சினைகளின் சாராம்சங்களை உள்ளடக்கி அதனை பிரதான தொனிப்பொருள்களாக எடுத்துக் கொண்டு ஒழுங்கமைப்புச் செய்யப்பட்டிருந்தது. இதில் முக்கியமாக வடகிழக்கில் வாழும் மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றுக் கொள்வதும், வடகிழக்குக்கு வெளியில் வாழும் தமிழ் பேசும் ஏனைய சமூகங்களினையும் பிரதிபலிப்பதாகவும், சிங்கள மக்களுக்கும், சர்வதேசத்துக்கும் இதன்மூலம் நாட்டிலுள்ள சிறுபான்மையினரின் சவால்களை வெளிப்படுத்துவதாகவும் அதை அமைத்திருந்தனர். 

இப்பேரணியில் சிறுபான்மை மக்களின் வாழ்க்கைச் சவால்களை அடையாளப்படுத்தும் முகமாக பத்து அம்ச கோரிக்கைகள் அடங்கிய எழுச்சி பிரகடனமும் வெளியிடப்பட்டிருந்தது. அவையாவன : 

காணிகளை மீளக் கையளி 

தமிழர் வாழ்வாதாரத்தை அழிக்காதே.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கு 

அரசியல் தீர்வுக்கு வாக்கெடுப்பு 

அடக்குமுறையை நிறுத்து 

இராணுவமே வெளியேறு

நில ஆக்கிரமிப்பு, சிங்கள மயமாக்கலை நிறுத்து

காணாமல் போனோருக்கு நீதி வேண்டும்

ஜனாசாக்களை அடக்கம் செய்

மலையக மக்களுக்கு ஆயிரம் ரூபாய் வேண்டும்

இவ்வாறு அக்கோரிக்கைகள் அமைந்திருந்தன. இதனை தமிழ் சிவில் சமூகங்கமும், மத, கலாசார தலைவர்கள், மற்றும் ஒரு சில வடகிழக்கு அரசியல்வாதிகள் ஏற்பாட்டு செய்ததாக கூறப்பட்டது. ஒரு ஜனநாயக நாட்டில் மக்களின் உரிமைக்களுக்காக மக்கள் ஒன்றிணைந்து போராடுவது சாதாரணமானதுதான். இப்பேரணி கிழக்கின் பொத்துவிலிருந்து வடக்கின் பொலிகண்டி வரை சென்று நிறைவு பெற்றது. 

இச்சம்பவத்தை மையப்படுத்திய பெப்ரவரி மாதம் 3ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்ட முதல்பக்க செய்திகளை மட்டும் எடுத்து நோக்குவோம். அதில் தமிழ் பத்திரிகைகளில்  தினகரன் மற்றும் வீரகேசரி பத்திரிகைகளும், சிங்கள பத்திரிகைகளில் தினமின மற்றும் மவ்பிம பத்திரிகைகளையும் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டோம். பெப்ரவரி மாதம் 3ஆம் திகதி பேரணி பொத்துவிலில் தொடங்கிய சந்தர்ப்பத்தில் தினகரன் பத்திரிகை முதல் பக்கத்தில் வெளியிட்ட செய்தியானது “போராட்டத்துக்கு நீதிமன்றம் தடை” என்ற தலைப்பில் எழுதப்பட்டிருந்தது. மேலும் ஜெனிவா மனிதவுரிமை பேரவை நெருங்கும் சந்தர்ப்பத்தில் மக்களை அரசுக்கு எதிராக திருப்பிவிடும் செயல் என்றும் ஜெனிவா மனிதவுரிமை பேரவைக்கு திரிபுபடுத்தப்பட்ட செய்தியைக் கொண்டு செல்வதாக இது அமையும் என்றும் செய்தி எழுதப்பட்டிருந்தது.  இச்செய்தியை வாசிப்பவர்களுக்கு அரசுக்கெதிரான ஒரு போராட்டம் இது என்பதும். அப்படி அரசுக்கு எதிராக செயற்படக் கூடாது என்பதையும் செய்தி வலியுறுத்துவதாக அமைந்திருந்தது.  அதேபோல் இப்பேரணிக்கு பொலிசார் நீதிமன்றில் தடையுத்தரவு பெறப்பட்டுள்ளதாகவும், அதனை போராட்டத்தை ஒருங்கிணைக்கும் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனிடம் நீதிமன்ற தடையுத்தரவு கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையிடப்பட்டு இருக்கின்றது. இது இப்பேரணி சட்டவிரோதமானது என்றவகையிலும் மக்கள் இப்போராட்டத்தில் இணைந்துக் கொள்வதை மட்டுப்டுத்தும் நோக்கில் பிரசுரிக்கப்பட்ட செய்திகளான தோற்றப்பாடுகளை வெளிப்படுத்துகின்றன. 

அதேவேளை அன்றைய தினம் வெளியாகிய வீரகேசரி பத்திரிகை “பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பேரணி ஆரம்பம்” என்று செய்தி வெளியிட்டிருந்தது. இதன் வெளிப்படுத்தலானது இப்பேரணியானது தமிழ் பேசும் சமூகங்களின் எழுச்சியாகவும் இதுவரை சிறுபான்மை சமூகங்கள் அனுபவித்த வரலாற்று அவலங்களுக்கு நீதிகோருவையாகவும் சித்தரிப்பதாக அமைந்துள்ளது.

தழிழ் பத்திரிகைகளில் இந்த இரண்டு பத்திரிகைகளையும் வாசிக்கும் மக்கள் குழுக்கள் இந்தப் பேரணி தொடர்பில் எத்தகைய கருத்துருவாக்கத்தைப் பெற்றிருப்பார்கள்? இருவேறு துருவ நிலைப்பட்ட கருத்துக்கள் இவை. எனவே மக்கள் இருவேறு குழுக்களாக துருவப்படுத்தப்படுகிறார்கள்.  தமிழ் மக்களிடையே ஒரு குழுவினருக்கு இந்த பேரணி சட்டத்திற்கு முரணானது என்பதும் நன்மைசெய்கின்ற அரசுக்கு எதிரானது என்பதும் கொடுக்கப்படுகிறது. இன்னொரு குழுவினர் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் விடிவுக்கான ஒரு ஆரம்பம் இது என்றும் இதில் எல்லோரும் கலந்துகொண்டானர் என்றும் கூறுகிறது. ஊடகங்கள் இவ்வாறு அறிக்கையிடுவதற்கான காரணங்கள் என்ன? ஒவ்வொரு ஊடகமும் தான் கொண்டிருக்கும் தனிப்பட்ட நிறுவனக்கொள்கையை முன்னிறுத்தி இவற்றைச் செய்கின்றனவா? அல்லது சாதாரண மக்களின் கட்சி சார் மனநிலைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதற்கு வலுவூட்டுவதும் தமது பொருளாதாரத்தை அதன்மூலம் தக்கவைக்கும் நோக்கில் செயற்படுகின்றனவா?

மறுபுறம் சிங்கள செய்திப் பத்திரிகைகளில் ஒன்றான திவயின பத்திரிகை பெப்ரவரி 03 ஆம் திகதி பேரணி தொடர்பாக 'வடக்கு, கிழக்கில் தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் 

புலம்பெயர் தமிழர்களின் 73 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்திற்கான எதிர்ப்பு" என்று முன்பக்கத்தில் செய்தி பிரசுரித்துள்ளது. இது முற்றுமுழுதாக தனது வாசகர்களின் மனதில் இப்பேரணி தொடர்பாக ஒரு எதிர்ப்புணர்வை உருவாக்கும் நோக்கைக் கொண்டிருந்து. அதேவேளை இந்த பேரணியை நடத்துபவர்கள், அதில் சம்பந்தப்படுபவர்கள் மீதான கசப்புணர்வையும் ஏற்படுத்துகிறது. ஒரு ஜனநாயக நாட்டில் உரிமைகளுக்காக ஒன்று திரளும் மக்களின் நிலையை ஊடகங்கள், அவர்கள் தமிழர்கள் என்பதால் அதை மறுக்கும் மனநிலைக்கு அந்தச் செய்தியை வெளியிட்டிருந்தன. 

மேலும் பொத்துவில் தமிழ் அரசியல் கட்சிகள் பொது மக்களுடன் இணைந்து போராட்டம் என்றும் அனைத்து செலவுகளும் புலம்பெயர் தமிழர்களிடமிருந்து கிடைக்கப்பெற்றதாகவும் அச்செய்தியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கொவிட் - 19 வழிகாட்டுதலின் அடிப்படையில் போராட்டத்தை நிறுத்த நீதிமன்ற உத்தரவை எடுப்பதாக பிரதி பொலிஸ்மா அதிபர் கூறியதாகவும் அச்செய்தியில் மேலும் கூறப்பட்டிருந்தது. இது முற்றிலுமாக இப் பேரணியின் நோக்கத்தை சிங்கள மக்கள் மத்தியில் எதிர்மறையாக காட்சிப்படுத்தும் செயற்பாடாக இருந்ததை அவதானிக்கலாம். 

அன்றைய தினம் வெளியாகிய மற்றுமொரு சிங்களப் பத்திரிகையான 'மவ்பிம' பத்திரிகை அதே செய்தியை இவ்வாறு அறிக்கை இட்டிருந்தது. அதாவது 'தமிழ் சமூகத்திற்கு எதிரான தமிழ் தேசிய கூட்டமைப்பு பொத்துவில் முதல் பொலிகண்டி வரை நடத்தப்போகும் போராட்டத்திற்கு எதிராக நீதிமன்ற தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்றும் தனிமைப்படுத்தல் சட்டத்தின் அடிப்படையில் நீதிமன்ற உத்தரவை பொலிசார் கோரியுள்ளார் என்றும் பிரசுரித்திருந்தது. இது மக்கள் போராட்டமல்ல அரசியல் கட்சிகளின் அதிலும் தமிழ் மக்கள் விரும்பாத ஒரு கட்சி செய்வதாக குறிப்பிட்டிருந்து. 

அதேபோல் அச்செய்தியில் மேலும் கொழும்பு துiமுக நகர் சட்டமூலத்திற்கு எதிராக கொழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என்றும் பிள்ளையான் விடுவிக்கப்பட்ட போது விருந்துபசாரங்கள் இடம்பெற்றன என்றும் ஒரு சில அமைச்சர்கள், மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் வீதிகளில் பார்ட்டிகள் நடத்தினர் என்றும் பொலிசார் அப்போதெல்லாம் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்றும் முன்னைய சம்பவங்களை மேற்கோள் காட்டி ஒப்பிட்டு தனது செய்தியை கட்டமைத்திருந்தது. இச்செய்தி,  நாட்டில் கடந்த காலங்களில் இடம்பெற்ற போராட்டங்களை அரசும் பாதுகாப்புத் தரப்பினரும் கையாண்ட விதத்தையும், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியை அவர்கள் கையாண்ட விதத்தையும் ஒப்பிட்டுக் காட்டுவதாக அமைந்துள்ளது. இது பெரும்பான்மைச் சிங்களவரை வாசகர்களாக கொண்ட சிங்கள பத்திரிகையொன்றின் சற்று முற்போக்கான ஊடக கலாசாரமாக அவதானிக்கப்படலாம். எனினும் அந்த அறிக்கையிடலின் நோக்கம் வாசகர்களை சென்றடைந்ததா? என்பது அனுமானிக்க முடியாததாகும்.  

இவ்வாறு மக்களின் பக்கம் நின்று மக்களின் செயற்பாட்டை அறிக்கையிடாது அரசின் அல்லது அதிகாரத்தின் பக்கதில் நின்று செய்தியை வெளியிடன. ஒரு  செய்தியை ஊடகங்கள் இனக் குழுக்கள், கட்சிசார் குழுக்களின் மனநிலைகளுக்கு ஏற்ப பிரசுரிக்கின்றனவா? இவ்வாறான நிலைமையால் மக்கள் துண்டாடப்படுகின்றனர். போரினால் வேறுபட்ட திசைகளில் பயணிக்கும் மக்களை இணைக்கும் ஆரம்ப கட்ட வேலைகளைக் கூட ஊடகங்கள் செய்ய தவறுவது ஏன்? இதன் மூலம் ஊடகங்கள் இலாபம் ஈட்டுகின்றனவா? மக்களை துருவப்படுத்தி வைத்திருத்தல் ஊடகங்களுக்கு இலாபமா? 

ஒவ்வொரு ஊடகமும் தான் சார்ந்த மக்கள் குழுவினருக்கு ஒரு செய்தியை கொண்டுச் செல்வதிலுள்ள வேறுபட்ட நிலைமைகளை இதற்கூடாக தெளிவாக புரிந்துக்கொள்ளலாம். இந்த வகையான அறிக்கையிடல்கள் மூலம் இனங்களுக்கிடையிலான புரிதல்களில் பாரிய இடைவெளி உருவாக்கப்படுகிறது. அதே சந்தர்ப்பத்தில் பரஸ்பரம் அவநம்பிக்கைகளை கட்டி எழுப்புவதாகவே இந்த செய்திகள் அமைந்துள்ளன. 

சிங்கள பத்திரிகைகள் தொடர்ச்சியாக பேரணி இடம்பெற்ற நாட்களில் மிகவும் கூர்மையாக தமிழ் அரசியல்வாதிகளை பற்றிய அறிக்கையிடல்களை சிங்கள மக்கள் மத்தியில் கொண்டுச் செல்வதற்கான முயற்சிகளை தமது செய்திகளினூடாக முனைப்பாக்கியிருந்தமை அவதானிக்கத் தக்கது. பெப்ரவரி – 05 ஆம் திகதி திவயின பத்திரிகையின் அறிக்கையிடலானது நீதிமன்ற உத்தரவை மீறி பொத்துவிலில் தமிழ் விடுதலை கூட்டணி போராட்டம் என்றும் அப்போராட்டம் 'காணாமல் போனவர்களுக்கு என்ன ஆனது', 'அரசியல் கைதிகளை விடுவிக்கவும்' என்ற பிரதான கோரிக்கைகளை தாங்கியதாக இருந்தது என்றவாறு அமைந்திருந்தது. அங்கு 11 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தும் இரண்டை மட்டும் பிரதானப்படுத்தியதன் நோக்கம் என்ன?

இவ்வாறான விடயங்கள் போருடன் சம்பந்தப்பட்டவை. இவை சிங்கள மக்கள் மத்தியில் எதிர்புணர்வை உருவாக்கக் கூடியவை. தமிழர்கள் மீதம் அவர்களது அரசியல் மீதும் சிங்கள பெரும்பான்மை மக்களை வெறுப்புணர்வுடன் நோக்குவதற்கு வழிசெய்பவையாகும். தொடர்ச்சியாகவே அரசியல் கைதிகள் விடயத்திலும் காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்திலும் சிங்கள மக்களின் மத்தியில் கடும்போக்காளர்களாக தம்மை காட்க்கொள்ள ஆட்சியாளர்கள் முனைவது இயல்பு. அதனை மேலும் வலுப்படுத்துவதாக அந்த விடயங்கள் தொடர்பான கோரிக்கைகள் மேலெலும் போதெல்லாம் அது பயங்கரவாத காரணம் காட்டி அடக்கப்படுகின்றது. இதனை சிங்கள மக்கள் மத்தியில் தமது வாக்கு வங்கியை சரிவடையாது வைத்துக் கொள்ள ஆட்சியாளர்கள் ஒரு உத்தியாக பயன்படுத்துகின்றனர். அவ்வாறான முயற்சிகள் வெற்றியளிப்பதாகவும் உள்ளன. எனவே சிங்கள மக்களை வாசகர்களாக கொண்ட இப்பத்திரிகைகளும் அவர்கள் விரும்பக் கூடிய வகையில் தமிழர்கள் தொடர்பான எதிர்மறையான செய்திகளை அறிக்கையிடுவதையே பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான செய்திகளின் அறிக்கையிடலும் அவதானிக்க முடியும்.  

அதேபோல் இப்போராட்டம் ஒரு தோல்வியடைந்த விடயம் என்று சிங்கள மக்கள் மத்தியில் கட்டமைப்பதற்கு ஏதுவான தகவல்களையும் இச்சிங்கள பத்திரிகைகள் உள்ளடக்குகின்றன. நீதிமன்ற உத்தரவை பொலிசார் இருமொழிகளிலும் அறிவித்ததாகவும், இது ஒரு ஆர்ப்பாட்டம் என்றும் சொற்ப அளவானவர்களே கலந்துக் கொண்டனர் என்றும் அறிக்கையிடப்பட்டு இருக்கின்றது. 

அதேபோல் இப்போராட்டமானது ஒரு குறிப்பிட்ட குழுவினரால் நடத்தப்படுகின்றது என்றும் இதற்கு பொத்துவில் உள்ளுர் அரசியல்வாதிகள் ஆதரவு வழங்கவில்லை என்றும் அச்செய்தியில் குறிப்பிடுவதனை வைத்து புரிந்துக்கொள்ளலாம். இது தமிழர்களின் அரசியலானது பிரிவினை எண்ணம் கொண்டவர்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது என்று சிங்கள மக்கள் நம்புவதற்கு ஏதுவான விடயமாகும். முஸ்லீம்கள் இப்போராட்டத்தில் இணைந்தமை பற்றி சிங்கள பத்திரிகையான திவயின பெரிதும் முக்கியத்துவம் அளிக்காத போக்கு காணப்படுகின்றது. அது தமிழ் - மற்றம் முஸ்லீம் சமூகங்கள் கருத்தியல் ரீதியாக இணைவதை விரும்பாத போக்கு என்பதும் அவதானிக்கத்தக்கது. 

மறுபுறம் அதே தினத்தில் வெளியாகியிருந்த வீரகேசரி பத்திரிகையானது இரண்டாவது நாளாகவும் இடம்பெற்ற பேரணி என்ற தலைப்பிடப்பட்டிருந்தது. இது முதற் பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டிருந்த தலைப்பாகும். அத்தலைப்பிற்கு கீழான செய்தியில் “எங்கே எங்கே எமது உறவுகள் எங்கே” என்றும் “ஜனாஸாக்களை எரிக்காதே”, மலையக மக்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடு” என்றும் பேரணியால் மக்கள் கூறிய வாசகங்களை அடையாளப்படுத்தி செய்தி வெளியிட்டிருந்தது. அதேபோல் செய்திக்களை புகைப்படமாக பேரணியில் புகைப்படங்களும், மதத்தலைவர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் ஆகியோரின் புகைப்படங்களும் பிரசுரிக்கப்பட்டிருந்தன. இச்செய்தியானது தமிழ் வாசகர்களுக்கு ஒரு நெகிழ்ச்சியான செய்தியாகவும், இவ்வாறான பேரணியின் கருப்பொருளுடன் அவர்கள் நெருக்கமாகும் முகமான செய்தி கட்டமைப்பாக இது அமைந்துள்ளது. முஸ்லீம் மக்களின் ஜனாஸா எரிப்புக்கு எதிராகவும், மலையக மக்களின் 1000 ரூபாய் சம்பள அதிகரிப்பு வழங்கவேண்டும் என்றும் கூறும் கோசங்கள் மூலமாக ஒட்டுமொத்த தமிழ் பேசும் சமூகங்களின் கவனத்தையும் இப்பேரணியின்பால் குவிமையப்படுத்துவதற்கு ஏற்றால் போல் வீரகேசரி பத்திரிகையின் அறிக்கையிடல் அமைந்துள்ளது. 

இவையிரண்டு அறிக்கையிடல்களையும் எடுத்து நோக்கும்போது சிங்கள பத்திரிகைகள் சிறுபான்மை மக்கள் பிரதிநிதிகளையும், மக்களையும் குற்றவாளிகளாகவும், குழப்பம் விளைவிப்பவர்களாகவும் சிங்கள மக்கள் மத்தியில் கட்டமைக்கின்றன என்பதும் அதேசமயம் தமிழ் பத்திரிகைகள் அதே தமிழர் பிரதிநிதிகளை வீரர்களாகவும், பேரணிக்கு நீதிமன்றம் தடை, பொலிசாரின் வீதித்தடைகள், என்பவற்றை அவர்கள் கையாளும் விடயங்களை வீரச்செயல்களாகவும் காட்டியுள்ளமை புலப்படுகின்றது. 

எனவே இங்கு கட்டமைக்கப்படும் அரசியல் பிம்பங்கள் மக்களை தாம் கூறுவதை நம்பும் விதமாகவும் அடிமட்ட சமூகங்களில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ள நல்லிணக்கம் சார் நேர்மறையான புரிதல்களை தகர்ப்பவையாகவும் காணப்படுகின்றன. இவ்வாறான செய்திகளின் பால் ஈர்க்கப்படும் சராசரி மக்கள் தமது புரிதல்களுக்கு அப்பால் சென்று ஊடக ஒழுங்குகளுக்கு ஏற்றால் போல் சிந்திக்கவும் செயற்படவும் தொடங்குவது இயல்பு. சிங்கள பத்திரிகைகள் சித்தரிப்பதை போல சிறுபான்மையினரின் போராட்டங்கள் எவ்வகையினவாக இருப்பினும் அதற்கு பயங்கரவாத, பிரிவினைவாத முத்திரை குத்தப் படுவதாகவும், தமிழ் பத்திரிகைகளின் சித்தரிப்புக்கள் தமிழர்களின் போராட்டங்கள் அனைத்தும் பெரும்பான்மை சமூகத்தால் வெறுக்கப்படுபவையாகவும், சட்டரீதியான எதிர்ப்பை முகங்கொடுக்க வேண்டியனவாயும் உள்ளன. 

பேரணியின் தொடர்ச்சியின் போது திவயின பத்திரிகையானது பெப்ரவரி – 09 ஆம் திகதி வடக்கில் போராட்டம் செய்தவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஊஊவுஏ காணொளிகளை பயன்படுத்தி அவர்களை அடையாளம் காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிக்கையிட்டிருந்தது. அதில் விசேடமாக ஒட்டுமொத்த போராட்டத்தின் கருப்பொருளும் தமிழீழ புலி உறுப்பினர்களை விடுதலை செய்ய கோருவதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதேபோல் இப்போராட்டம் தொடர்பான புலனாய்வு தகவல்கள் இது ஜெனிவா மனித உரிமைப் அமர்வுகள் நடத்தப்படும் போது இது கவனத்தை ஈர்க்கும் செயல் என்று கூறுகின்றது என்று அறிக்கையிடப்பட்டு இருந்தது. அன்றைய தினம் வீரகேசரி பத்திரிகையில் பேரணி முள்ளிவாய்க்காலை அடைந்தமை பற்றியும் அங்கு சுடர் ஏற்றி அஞ்சலி செய்யப்பட்டமையும் அறிக்கையிடப்பட்டிருந்தது. அதேபோல் பேரணியில் சென்றோர் மீது திருமலையில் தாக்குதல் நடத்தப்பட்டது. என்றும் வாகனங்களின் டயர்கள் சேதப்படுத்தப்பட்டன என்றும் அறிக்கையிடப்பட்டிருந்தது. மேலும் திருமலையில் வைத்து பேரணியில் சென்றோரை இனந்தெரியாத சிலர் தாக்கியதாகவும், வீதிகளில் ஆணிகள் வீசப்பட்டு காணப்பட்டன என்றும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

இவ்வாறு பேரணியில் சென்றவர்களுக்கு ஏற்படுத்தப்பட்ட தடைகளைப் பற்றி சிங்கள பத்திரிகைகள் எதுவும் பதிவுச் செய்யவில்லை. எனவே ஒரு ஜனநாயக ரீதியான பேரணிக்கு ஏற்படுத்தப்பட்ட தடைகள் குறித்து பேசுவரை சிங்கள பத்திரிகைகள் தவிர்த்திருக்கின்றன என்பதிலிருந்து அவர்களின் அறிக்கையிடலின் நடுநிலைத்தன்மை வெளிப்படையாக புலப்படுகின்றது. தமிழ் பத்திரிகையின் செய்தியில் காணப்படும் போராட்டங்களுக்கான எதிர்ப்புக்கள் குறித்த செய்தி உறுதிப்படுத்தப்பட்டதாக உள்ளதா இல்லையா என்பது பற்றி போதுமான ஆதாரங்கள் முன்வைக்கப்படவில்லை. இருப்பினும் பெரும்பான்மை இனத்தவர்கள் மீதும் பாதுகாப்பு மீதும் தமிழர்களுக்கு ஒரு பொறுப்புணர்ச்சியும், அவநம்பிக்கையும் ஏற்படுகின்றது. அவ்வாறான சிந்தனைப்போக்கு கட்டமைக்கப்படுகின்றது. 

அதேபோல் போராட்டத்தின் பின்வந்த நாட்களில் திவயின பத்திரிகையானது (பெப்ரவரி – 7, 8) முற்றிலும் வேறுபட்ட விதமாக இப்பேரணியின் செய்திகளை அறிக்கையிட்டிருந்தது. அதாவது வடக்கில் பிரச்சினை உருவாக்குபவர்கள் குறித்து உளவுத்துறை அவதானம் செலுத்தியுள்ளதாகவும் 73 ஆவது சுதந்திரத்தினத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய வடக்கிலும் கிழக்கிலும் குழுக்கள் அமர்த்தப்பட்டுள்ளதாகவும் தமிழ், முஸ்லீம் அரசியல்வாதிகள் மக்களுக்கு மரியாதை கொடுப்பதில்லை எனவும் இவர்கள் பணத்திற்காக வேலை செய்பவர்கள் என்றும் கடுமையான சொற்பதங்களை பிரயோகித்து அச்செய்திகள் பத்திரிகையின் முன்பக்கத்தில் முன்பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளன. 

இவ்வாறான அறிக்கையிடல்களால் சிங்கள சமூகம் எந்த செய்தியை நம்புவது என்ற நிலைக்கும் தள்ளப்படலாம். அல்லது இவையனைத்தையும் பரிசீலிக்காமல் சிறுபான்மை சமூகத்தின் மீது வெறுப்பைக் காட்டவும் முனையலாம். அது தான் தொடர்ச்சியாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. அதேபோல் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட தமிழ் பத்திரிகைகளும் அரசியல்வாதிகளையே சுற்றி சுழல்கின்றன. இதனை ஒரு சிவில் சமூகத்தின் போராட்டமாக கட்டமைப்பதில் எதிர்ப்பார்த்தளவு வெற்றி பெறவில்லை என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். 

இவ்வாறான ஊடக துருவப்படுத்தல்களால் இப்பேரணி எந்த ஒரு நேர்மறையான விமர்சனங்களையும், சமூக உரையாடல்களையும் அது நடந்த காலத்திற்கு பின்னர் ஏற்படுத்தவில்லை என்பதே இவ்வாறான செய்திகளின் விளைவாக அமைந்திருக்கின்றது. இதனால் இரு சமூகங்களும் வெவ்வேறான வடிவங்களில் திசைமுகப்படுத்தப்பட்டுள்ளன. இங்கு ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட செய்திகள் முதற்பக்க செய்திகள் மட்டுமே அதேபோல் அதேபோல் இது தொடர்பாக அரசியல்வாதிகளின் கூற்றுக்கள், நேர்காணல்கள் கருத்தாடல்கள் அவற்றுக்கு இவ்ëடகங்கள் கொடுக்கும் முக்கியத்துவம் என்பவற்றை ஆய்வுக்குட்படுத்தினால் இது இன்னும் ஆழமான துருவப்படுத்தல்களாக கட்டமைக்கப்படுவது புலப்படும். 

இவ்வாறு நாட்டில் இடம்பெறும் ஒவ்வொரு சம்பவத்தையும் தமிழ் - சிங்கள ஊடகங்கள் எவ்வாறு அறிக்கையிடுகின்றன என்பதை நுணுகி ஆராய்ந்தால் பல பெறுபேறுகளை பெற்றுக்கொள்ளலாம். இது நாட்டின் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்துக்கும் சகவாழ்வுக்கும் குறிப்பிடத்தக்க அளவு தாக்கம் செலுத்தக்கூடிய காரணியாக இருக்கின்றது. ஒரு மொழிசார்ந்த பத்திரிகைகளுக்கு உள்ளேயும் செய்தி அறிக்கையிடலில் வேறுபாடுகள் காணப்படுகின்றன. இது அரசியல் சார்பு நிலை, விழுமியங்கள் என்பவற்றுக்கு ஏற்பவும் அது சென்றடையும் மக்கள் கூட்டத்தின் விருப்பு வெறுப்புக்கள், அரசியல், இனத்துவ கொள்கைகள், கல்விமட்டம் என்பவற்றுக்கு ஏற்பவும் மாறுபடுகின்றன. 

இது ஒரு ஆரோக்கியமான ஊடக கலாசாரமா? என்பது கேள்விக்குறி. இவ்வாறான ஊடக துருவப்படுத்தல்களால் சாதாரண சிவில் சமூகம் நுணுக்கமான விதத்தில் கூறுபோடப்படுகின்றது. சக இனங்களை புரிந்துக் கொள்வதற்கும் மதிப்பதற்கும் வாய்ப்பு ஏற்படுத்துவதும் ஊடகங்களின் பணியாக அமைதல் வேண்டும். இவ்வாறான துருவப்படுத்தல் போக்குகளை மட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகும். அவ்வாறில்லையெனின் இலங்கை சமூகங்கள் கருத்தியல் ரீதியாகவும் மிகவும் அன்னியமாவதை தடுக்க முடியாது. 


     


Comments

Popular posts from this blog

Prisoners in Sri Lanka and Their Struggles for Rights

Prisoners in Sri Lanka and Their Struggles for Rights. By Arul Karki A  Abstract This research  focuses on addressing the issues and rights of prisoners in Sri Lanka. It further examines other challenges comprising the penal framework in the country including issues like; recurrent trend of overcrowding, resource constraints, high levels of poverty, poor standards of minimum housing, health and other rehabilitation services. Additionally, it seeks to understand the legal regime on prisoners’ rights in Sri Lanka and whether or not these rights exist in practice. In addressing some of the key areas of the plight of prisoners in Sri Lanka, this article embarks on trying to underscore the feel for reforms and improvements in the country’s penal system. Introduction:D The prison system in Sri Lanka has for a long time had undesirable challenges which have negative consequences on the patterns of life of those serving sentences. Just like any other country’s prisoners, incarcerated ...

Impact of Climate Change on Horton Plains National Park in Sri Lanka

Impact of Climate Change on Horton Plains National Park in Sri Lanka. By Arul karki   Introduction: Horton Plains National Park, located in the central highlands of Sri Lanka, is a biodiversity hotspot renowned for its unique ecosystems and diverse wildlife. The park encompasses a range of habitats, from montane cloud forests to grasslands, making it a critical conservation area. However, like many regions around the world, Horton Plains is not immune to the effects of climate change. This article will delve into the impacts of climate change on Horton Plains National Park in Sri Lanka. 1. Changes in Temperature: One of the most evident impacts of climate change on Horton Plains is the rising temperatures. Studies have shown that temperatures in the region have been steadily increasing over the past few decades, leading to shifts in the park's ecosystems. Higher temperatures can disrupt the delicate balance of flora and fauna in the park, affecting everything from plant growth to a...

A Memorable Experience at the Bandarawela Archimedes International School Innovation Expo 2025 By Arulkarki

A Memorable Experience at the Bandarawela Archimedes International School Innovation Expo 2025 By Arulkarki          In my recent visit to the Bandarawela Archimedes International School, I had the distinct honor of being a special guest at the Innovation Expo 2025. This event, dedicated to fostering creativity and showcasing innovative projects developed by students, was not only a platform for young minds to express their ideas but also a celebration of ingenuity and academic excellence. Upon arriving at the school, I was immediately struck by the vibrant energy that permeated the grounds. The atmosphere buzzed with excitement as students prepared their exhibits and presentations. It was clear that significant effort had gone into planning and executing this event, and I was eager to see the fruits of their labor. As I toured the various displays, I was genuinely impressed by the diversity of projects on offer. Students from different age groups presented thei...