ஒரு வசந்த காலத்துக்காக வருடம் முழுவதும் காத்திருக்கின்றோம்… ஜோக்கி தயாளனின் கதை
அருள்கார்க்கி.
இலங்கையில் சுற்றுலாத்துறைக்கு மிகவும் பிரசித்தி பெற்ற நுவரெலியா நகரானது உலகளவில் அறியப்பட்ட ஒரு இடமாகும். வருடம் முழுவதும் சீரான காலநிலையும், பசுமையான சுற்றாடலும் நிறைந்த நுவரெலியா நகரானது கொவிட் பரவலைத் தொடர்ந்து பொலிவிழந்து வருகின்றது.
பெரும்பாலான நகரவாசிகள் இங்கு வரும் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் மூலம் நாளாந்த வருமானத்தை சம்பாதிப்பவர்களாவர். தொடர்ச்சியான முடக்கம், பயணக்கட்டுப்பாடு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையில் ஏற்பட்ட வீழ்ச்சி என்பவற்றின் காரணமாக இவர்கள் பாரிய சமூக, பொருளாதார நெருக்கடிகளை எதிர் கொண்டுள்ளனர். வியாபார ஸ்தலங்கள், வீதியோர கடைகள், குதிரையோட்டிகள், படகு சவாரி செய்வோர் போன்றோர் இவ்வாறு வருமானமிழந்து திண்டாடுகின்றனர். இவர்களின் குடும்ப பொருளாதாரம் கல்வி, என்பனவும் கடுமையான பின்னடைவுகளை கொண்டுள்ளது.
“நாம் காலையிலிருந்து மாலை வரை இங்கு இருப்போம். குதிரைகளை மேய்ச்சலுக்கு விடுதல், அவை பாதைகளை கடக்காமல் பார்த்துக் கொள்ளுதல், புல் வெட்டி போடுதல், குதிரை மாடங்களை துப்புரவு செய்தல் என்பனவே எமது அன்றாட பணி. கொரோனாவால் எமது வருமானம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் குதிரை சவாரிகளோ, பந்தயங்களோ இல்லை. எமது கையிலுள்ள காசை செலவழித்து குதிரைகளுக்கு தேவையான கவனிப்பை வழங்குகின்றோம்.” என்கின்றார் ஜோக்கி தயாளன்.
தயாளன் ஒரு சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர். அவரின் தாத்தாவும், தந்தையும் குதிரைகளை பராமரிக்கும் வேலையை மட்டுமே செய்தவர்கள். தயாளன் தன் சொந்த முயற்சியால், குதிரைகளை விலைக்கு வாங்கி, தானும் குதிரையோட்டப் போட்டிகளுக்கான பயிற்சிகள் பெற்று இன்று நுவரெலியா ரோயல் டார்ப் கிளப் இல் (சுழலயட வுரசக ஊடரடி) மூன்று முறை சாம்பியன் பட்டம் பெற்ற ஜோக்கியாக திகழ்கின்றார். நுவரெலியாவில் ஏப்ரல் வசந்த காலத்தில் மட்டுமே குதிரை பந்தய போட்டிகள் இடம்பெறும். ஏனைய நாட்களில் சுற்றுலாப் பயணிகளை குதிரைச் சவாரி கூட்டிச் செல்வதே தயாளனின் பணி.
கொவிட் காலத்தில் அந்த வருமானமும் இல்லாத காரணத்தினால் தயாளனும், அவரையொத்த தொழில் செய்யும் நண்பர்களும் மிகுந்த சவாலான நிலைமைக்கு முகங் கொடுத்துள்ளனர். இவர்களின் பொருளாதார நெருக்கடிகள் ஒருபுறமிருக்க தமது குதிரைகளை பராமரிப்பதற்கான போதிய வசதிகள் இன்றியும், அவற்றுக்கான பராமரிப்பு செலவுகளை ஈடுசெய்ய முடியாமலும் திண்டாடுகின்றனர்.
நுவரெலியா ரேஸ் கோஸ் என்றழைக்கப்படும் விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் இயங்கும் நிலப்பகுதியிலேயே இவர்கள் தமது குதிரைகளை வைத்துள்ளனர். குதிரைப் பந்தய போட்டிகள் இடம்பெறுவதும் இங்குதான். இவர்கள் இந்த நிலத்தை பயன்படுத்துவதற்காக மாதாந்தம் விளையாட்டுத்துறை அமைச்சுக்கு ரூ.500 கட்டணம் செலுத்த வேண்டும். அதேப்போல் உயர் ரக குதிரைகளை பாதுகாப்பதற்கும் அவற்றுக்கு தேவையான உணவு என்பவற்றுக்கும் பிரத்தியேகமாக லாயங்கள் இருக்கின்றன. அவற்றுக்கு வாடகை செலுத்தி தமது குதிரைகளை இவர்கள் பராமரிக்க வேண்டியுள்ளது. உயர் ரக குதிரைகளை பராமரிப்பதற்கு நாளாந்தம் ரூ. 1500.00 வரை செலவு ஏற்படுவதாக ஜோக்கி தயாளன் கூறுகின்றார்.
“எல்லா குதிரைகளையும் லாயங்களில் வைத்து பராமரிக்க முடியாது. சிறிய ரக குதிரைகளை போனி என்று அழைக்கப்படும் குதிரைகளை மேய்ச்சலுக்காக ரேஸ் கோஸில் விடுவோம். அவை ஓரிடத்தில் இருப்பது குறைவு, அவற்றை கட்டுப்படுத்துவதும் கடினம். அவ்வாறு அவை பிரதான வீதிகளுக்கு சென்று விட்டால், போக்குவரத்து பொலிசார், நுவரெலியா மாநகரசபை ஊழியர்கள் அவற்றை பிடித்துச் சென்று விடுவர். பின்னர் அவற்றை மீட்பதற்கு நாங்கள் மிகுந்த சிரமப்பட வேண்டியுள்ளது.” என்கின்றார் ஜோக்கி தயாளன்.
ஜோக்கி ராஜன் இது தொடர்பாக கூறுகையில் நகரசபை ஊழியர்களை இவ்வாறு பிடித்துச் செல்லப்படும் குதிரைகளை அவர்கள் சரியாக பராமரிப்பதில்லை எனவும், சமீபத்தில் கூட ஒரு குதிரை பராமரிப்பின்றி நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதாகவும் மிகுந்த வருத்தத்துடன் கூறுகின்றார். இவ்வாறான சந்தர்ப்பங்களில் குறித்த குதிரையின் உரிமையாளர்களுக்கு நட்டஈடு வழங்கப்படுவதுமில்லை. எனவே குறித்த குதிரையின் உரிமையாளர் தனது குதிரையின் தனது குதிரையும் இழந்து வாழ்வாதாரத்தையும் இழந்துள்ளனர் என அவரின் நண்பர்கள் கூறுகின்றார்கள்.
தாம் மாநகரசபைக்கும், ரேஸ் கோஸ் நிலத்தை பயன்படுத்துவதற்கு விளையாட்டுத்துறை அமைச்சுக்கும் கட்டணம் செலுத்தினாலும் தமது குதிரைகளுக்கு பாதிப்பு ஏற்படும்போது யாரும் பொறுப்பு கூறுவதில்லை என இவர்கள் கூறுகின்றார்கள். ஜோக்கி தயாளன் கூறுகையில் “எமது குதிரைகள் புற்றரைகளை கடக்காமல் இருப்பதற்கான முறையான பாதுகாப்பு வேலிகள் இதுவரை அமைக்கப்படவில்லை. போனிகள் நூற்றுக்கணக்கில் உள்ளன. அவற்றை கட்டுப்படுத்துவதும் சிரமமான காரியம். இவை பிரதான வீதிகளுக்கு செல்லும் போது நகரசபை ஊழியர்கள் கடுமையாக தாக்குவதையும் நாங்கள் நேரடியாக கண்டுள்ளோம். சமீபத்தில் ஒரு குதிரையின் கால்கள் உடைக்கப்பட்ட சம்பவம் கூட நடந்திருக்கின்றது. இவற்றுக்கு ஏதாவது நோய்கள் ஏற்படும் போது அதற்கு நாங்களே வைத்தியம் பார்க்க வேண்டும். அதற்கு தகுந்த மிருக வைத்தியரோ சிகிச்சை நிலையமோ இங்கு இல்லை. நாட்டின் சுற்றுலாத்துறை தொடர்பாக அரசாங்கம் வருமானத்தை மட்டும் பார்க்காமல் இவ்வாறான துணைச் சேவைகளின் தரத்தையும் ஆய்வு செய்து சேவைகளை விஸ்தரிக்க வேண்டும்.” என்கின்றார்.
1958 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க விலங்குகள் சட்டமானது 2009 ஆம் ஆண்டு திருத்தப்பட்டதன் அடிப்படையில் விலங்குகளுக்கு எதிராக தவறுகள் புரியப்படுகின்ற போது அதற்கெதிராக நியாயாதிக்கத்தை பெறும் பொருட்டு நீதிமன்றத்தை நாட முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் விலங்கொன்று தவறு புரிந்ததாக காணப்படுமிடத்து அவ்வழக்கு முடியும் வரை வர்த்தமானியில் வெளியிடப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட விலங்கு பராமரிப்பு நிலையத்தின் பொறுப்பில் பராமரிக்கப்பட வேண்டும். அல்லது விலங்குகள் நலச்சேவையை முதற்படியாக குறிக்கோளாக உடைய ஏதேனும் அரச சார்பற்ற நிறுவனத்துக்கு கையளிக்கப்படல் வேண்டும் அல்லது யார் விலங்குகளுக்கான பராமரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் என நீதிமன்றம் திருப்திப்படுகின்றதோ அவரின் பொறுப்பிற்கு கையளித்தல் வேண்டும் என மூன்று உறுப்புரைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே இவ்வாறான நியமங்கள் பின்பற்றப்படாது தமது குதிரைகள் வதைக்கப்படுவதாக அவர்கள் கூறுகின்றார்கள். இச்சட்டங்கள் தொடர்பாக குதிரை வளர்ப்பாளர்களுக்கும் போதிய தெளிவு இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
.
சுற்றுலாத்துறையின் மூலம் பெருமளவான வருமானத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயற்படும் நுவரெலியா மாநகரசபை இதற்கான ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டியது அவசியம் என்றே ரேஸ் கோஸ் குதிரை வளர்ப்பாளர்கள் கூறுகின்றார்கள். அதேபோல் அண்மையில் தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் சிங்கமொன்றுக்கு கொவிட் தொற்று உறுதியானது. பாதுகாப்பான கூண்டுகளுக்குள் இடப்பட்டிருக்கும் நிலையிலேயே இவ்வாறான சம்பவம் இடம்பெறும் போது வெட்டவெளியில் திரியும் இவ்வாறான விலங்குகளுக்கு தொற்று ஏதும் ஏற்பட்டால் அது எவ்வளவு பாரிய பரவலையும் சிக்கலையும் ஏற்படுத்தும் என்பது உணரப்பட வேண்டும். அதிகமான மக்கள் சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்ளும் நுவரெலியா போன்ற நகரங்களில் கூடுதல் முக்கியத்துவம் எடுத்து இவ்விடயங்கள் தீர்க்கப்பட வேண்டும். அதேபோல் இலங்கையில் இவ்வாறு சவாரி விலங்குகளுக்கென்று எவ்வித சட்டங்களும் பிரத்தியேகமாக இல்லை. அந்த குறைபாடு காரணமாக இவ்வாறான விலங்குகள் பல்வேறு பாதிப்புக்களையும், துன்புறுத்தல்களையும் அனுபவிக்கின்றன.
அதேபோல் 2009 ஆண்டு விலங்குகள் திருத்தச்சட்டத்தில் மூலம் 1958 ஆம் ஆண்டு 29 ஆம் இலக்க விலங்கு பாதுகாப்புச் சட்டத்தில் பகுதி ஐ இல் உட்பிரிவுகளான 1, 2, 3, 4 என்பன திருத்தப்பட்டன. அதன் அடிப்படையில் விலங்குகளை கொண்டு செல்லல், பராமரிப்பு, அரச மிருக வைத்தியரின் சேவைகளை பெற்றுக் கொள்ளல், பிரதேச செயலகங்களின் பொறுப்புகள் என்பன கூறப்பட்டுள்ளன.
ஆனால் அவை போதுமான நடைமுறை சாத்தியங்களை கொண்டிருக்கவில்லை என குதிரை வளர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் இரண்டு அரச விலங்கு பராமரிப்பு நிலையங்கள் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால் அவ்வாறான பராமரிப்பு நிலையங்கள் எவையும் நுவரெலியா நகரிலோ அண்மைய பிரதேசங்களிலோ இல்லை. எனவே அரச தரப்பில் இவ்வாறான விலங்குகள் தொடர்பான போதுமான ஏற்பாடுகள் இல்லை என அறிய முடிகின்றன. இவை போன்ற குறைபாடுகள் நிவர்த்திச் செய்யப்பட வேண்டும் என தயாளன் போன்றோர் கோரிக்கை விடுப்பது நியாயமானதே.
“நான் டுபாயில் சென்று குதிரையேற்றத்துக்கு பயிற்சி பெற்று வந்தேன். அந்நாடுகளில் இத்தொழிலுக்கு நல்ல சம்பளமும், சலுகைகளும் உண்டு. இலங்கையில் நுவரெலியாவில் மட்டுமே ரேஸ் கோஸ் உள்ளது. ஆனால் எமக்கான போதிய வருமானமும் குதிரைகளுக்கு தேவையான சலுகைகளும் இல்லை. நாங்கள் தொடர்ச்சியாக வெளிநாடுகளுக்கு சென்று இந்த தொழிலை செய்ய முடியாது. அதேபோல் நாங்கள் இந்த தொழிலில் அதிகமாக முதலீடு; செய்துள்ளோம். எனவே இவ்வாறான நேரங்களில் நாங்கள் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் போது அரசு மானியங்களை வழங்க வேண்டும். அரசாங்கம் குறிப்பிட்ட ரூ. 5000 நிவாரண கொடுப்பனவு கூட எமக்கு கிடைக்கவில்லை.” என்கின்றார் ஜோக்கி தயாளன்.
எனவே சுற்றுலாத்துறை நகரான நுவரெலியா போன்ற நகரின் இவ்வாறான இருண்ட பக்கங்களை அரசு கவனமெடுத்து அவர்களின் வாழ்வாதாரத்துக்கு பங்களிப்பு செய்ய வேண்டும். காலத்துக்கு காலம் தேவைப்படும் புதிய சட்டங்களை உருவாக்குவதும் அதனை சரியாக நடைமுறைப்படுத்துவதும் மக்களின் வரி வருமானத்தை பெறும் அரசின் தலையாக கடமை என்பதை மீண்டும் அழுத்தி சொல்ல வேண்டியுள்ளது.
Comments
Post a Comment