பெருந்தோட்ட தொழிலாளர்களின்
வேதனம் -
முரண்பாடுகளும் எதிர்காலமும்
அருள்கார்க்கி.
“ 1000 ரூபா சம்பள அதிகரிப்பு “, “சம்பள நிர்ணய சபையில் வாக்கெடுப்பு வெற்றி” என்று கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இதனை மக்கள் உற்சாகமாக வரவேற்றதும், கொண்டாடியதும் சமூக வலைத்தளங்களிலும் காணக் கிடைத்தது. ஆனால் ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பு வழங்கப்படுவதற்கு அரசாங்கம் வெளியிட்ட வர்த்தமானிக்கு எதிராக கம்பனிகள் கடந்த வாரம் மேன்முறையீடு செய்திருக்கின்றன. இச்செய்தியை ஊடகங்கள் வெளியிட்டதன் பின்னர் மக்களின் மகிழ்ச்சி விரக்தியாக மாறியது. இதன் உண்மைத்தன்மைகளை மக்கள் தெளிவாக புரிந்துக் கொள்வதற்கு முன்னரே தொழிற்சங்க தரப்பில் இருந்து 1000 ரூபாய் பெற்றுக் கொடுத்துவிட்டதாக அறிவிப்பு வெளியானது. அது உண்மையில் பல்வேறு நிபந்தனைகளின் அடிப்படையில் இடம்பெற்றது என்பதும் இதற்கு பின்னால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கள், இழப்புகள் என்பவற்றையும் ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் அரசின் உடைமையாகவிருந்த பெருந்தோட்டங்கள் கம்பனிகள் வசம் ஒப்படைக்கப்பட்டது. நீண்டகாலம் குத்தகை அடிப்படையில் கம்பனிகளிடம் பெருந்தோட்டங்களை ஒப்படைத்தபோது கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் தொழிலாளர்களின் சம்பளம் நிர்ணயிக்கப்படவில்லை. அச்சமயத்தில் சம்பளமானது சம்பள நிர்ணய சபையினூடாகவே நிர்ணயம் செய்யப்பட்டது. 1996 ஆம் ஆண்டிலிருந்து கூட்டு ஒப்பந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இன்றுவரை நடைமுறையில் இருக்கும் இம்முறையானது பெருந்தோட்ட தொழில்துறையில் தங்கியிருக்கும் தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் நலன்களில் தொடர்புடையதாகும். மறுபுறம் பெருந்தோட்ட தொழில்துறைக்;கு வெளியில் மலையக மக்களின் ஏகோபித்த கருத்தாடலுக்கு உட்பட்ட ஒரு விடயமாகும். தொழிலாளர்களிடம் மாதாந்த சந்தாவை பெறும் தொழிற்சங்கங்கள் தமது அரசியல் இருப்பை தக்கவைக்க கூட்டு ஒப்பந்தத்தை உபயோகப்படுத்துகின்றன என்று இன்று சமூகத்தில் பரவலாக கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.
இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை மேற்கொள்ளப்படும் கூட்டு ஒப்பந்தமானது அங்கம் வகிக்கும் தொழிற்சங்கங்களுக்கும் தோட்டக் கம்பனிகளுக்கும் இடையில் பாரிய இழுபறியாகவே வரலாற்று ரீதியாக இருந்து வந்துள்ளது. காலத்துக்கு காலம் நிலவும் வாழ்க்கைச் செலவு புள்ளிக்கு ஏற்ப தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டாலும் கம்பனிகளின் தரப்பில் அதற்கான மறுப்பே வெளிப்படுத்தப்பட்டுள்ளது. உற்பத்திச் செலவை காரணம் காட்டி கம்பனிகள் தொழிலாளர்களின் வேதனத்தை அதிகரிக்க முடியாது என்று வாதிடுகின்றன.
ஒவ்வொரு முறையும் இழுபறியின் பின்னர் சொற்ப அளவான சம்பள அதிகரிப்பு இணக்கப்பாட்டுக்கு வரும். எனினும் அவ்வாறான சந்தர்ப்பங்களில் தொழிலாளர் மீதான சுமை அதிகரிக்கப்பட்டே வந்திருக்கின்றது. அதேபோல் அவர்கள் அனுபவிக்கும் தொழில்சார் நலன்களும் பறிக்கப்பட்டு வந்திருக்கின்றன. எனினும் தொழிற்சங்க தரப்பில் இவ்விடயங்கள் மறைக்கப்பட்டு சம்பள அதிகரிப்பு பெற்றுக் கொடுக்கப்பட்டதாக மக்கள் நம்ப வைக்கப்படுகின்றனர். இம்முறையும் இவ்விடயங்களுக்கு சற்றும் குறைவில்லாமல் அண்மையில் இடம்பெற்ற பேச்சு வார்த்தையின் பின்னர் தொழிற்சங்க தரப்புகள் உண்மையை மறைத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளன.
கடுமையான இழுபறிக்கு பின்னர் ரூ. 1000 சம்பள அதிகரிப்பு வழங்க கம்பனிகள் இணக்கம் தெரிவித்துள்ள சூழலில் மாதமொன்றுக்கு 13 நாட்களே வேலை வழங்கப்படும் என்று தமது நிபந்தனையை அறிவித்துள்ளன. அதேபோல் வருகை ஊக்குவிப்பு, மேலதிக கிலோவுக்கான கொடுப்பனவு, விடுமுறை தொழில்சார் நலன்கள் தொடர்பாக எவ்வித கருத்துக்களையும் கம்பனிகள் முன்வைக்கவில்லை. அரசாங்கத்தின் உள்வருகை, சம்பள நிர்ணய சபையின் அழுத்தம் போன்றவற்றால் ரூ.1000 வழங்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளன பெருந்தோட்ட பிராந்திய கம்பனிகள். மறுபுறம் 1000 ரூபாய் வழங்க வேண்டிய கட்டாயம் உருவானதால் கூட்டு ஒப்பந்தத்திலிருந்து தாம் விலக நேரிடும் என்று பிராந்திய தோட்டக் கம்பனிகள் தொழில் ஆணையாளருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக தொழில் ஆணையாளர் பிரபாத் சந்திரகீர்த்தி உறுதிப்படுத்தியுள்ளார். சுமார் 25 வருடங்களாக நடைமுறையில் இருக்கும் கூட்டு ஒப்பந்த முறைமையில் இருந்து கம்பனிகள் விலகுவதானது தொழிற்சங்கங்களுக்கு அரசியல் ரீதியாக பாதிப்பாக அமையுமென்பதால் அவை கம்பனிகளை தக்கவைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. இவ்விடயங்கள் தொடர்பாக பெருந்தோட்ட கம்பனிகளின் பேச்சாளர் திரு. ரொசான் ராஜதுரை கருத்து பகிர்கையில் 1000 ரூபாய் என்ற அலை அரசியல் நோக்கங்களுக்காகவே பரப்பப்பட்டுள்ளது. ஊடகங்களும் அதன் ஒரு மட்டுமே பேசுகின்றன. நிர்வாக ரீதியாக பார்க்கும் போது எமக்கு பாரிய சவால்கள் உள்ளன. தொழிற்சங்கங்கள் இவ்விடயத்தில் நியாயமற்று கோரிக்கை விடுக்கின்றன. குறிப்பாக இன்றுள்ள தேயிலையின் விலையை பொறுத்தே எமது உற்பத்திச் செலவீனங்களை கணக்கிட்டு பார்க்கின்றோம். தேயிலையின் விலை அதிகமாக சென்றால் எம்மால் அவர்கள் கேட்கும் சம்பளத்தை வழங்க முடியும். இன்றுள்ள வாழ்க்கைச் செலவுக்கேற்ப தொழிலாளர்களுக்கு வழங்கும் ஊதியம் போதுமானதல்ல என்பதை நாமும் ஏற்றுக் கொள்கின்றோம். ஆயினும் எமக்கு வேறு மாற்று உத்திகள் இல்லை. சுற்றுலாத்துறை, ஆடை உற்பத்தி துறை போன்றவற்றில் 1000 ரூபாய் சம்பளம் கேட்கவில்லையே. எம்மிடம் மட்டுமே கேட்கின்றனர். ஒவ்வொரு தொழில் துறையும் பெற்றுக் கொள்ளும் வருமானத்துக்கு ஏற்பவே ஊழியர்களுக்கான கொடுப்பனவுகளை தீர்மானிக்க முடியும். தேயிலை தொழில் துறையும் அவ்வாறு தளம்பலான வருமானத்தையுடையதே.
அரசியல்வாதிகளோ, தொழிற்சங்கவாதிகளோ தோட்டங்களை நடத்துவதில்லை. அதில் ஏற்படும் நட்டங்களை தொழிற்சங்கங்களோ அரசாங்கமோ பொறுப்பேற்பதில்லை. அதனை நாங்களே சுமக்க வேண்டும். இவ்வாறான சூழலில் கூட்டு ஒப்பந்தம் என்ற முறையிலிருந்து வெளியேறுவதற்கு நாங்கள் ஆலோசித்து கொண்டிருக்கின்றோம். எமக்கான சுமை மேலும் அதிகரிக்கும் சந்தர்ப்பத்தில் நாம் அவ்வாறான முடிவுகளை எடுக்க வேண்டிய அழுத்தத்துக்கு உள்ளாகின்றோம்.
சம்பள நிர்ணய சபை கூறுவது போல் செய்ய முடியாது. அதற்கான நியாயங்களை நாங்கள் பேச்சு வார்த்தையில் முன் வைத்துள்ளோம். தற்போது ஆயிரம் ரூபாய் தருவதற்கு நாங்கள் உடன்பட்டிருக்கின்றோம். அதேபோல் சில நிபந்தனைகளின் அடிப்படையிலேயே அது அமையும். அதனையும் கம்பனிகள் நிராகரித்தால் எம்மால் வேறு தீர்வுகளை வழங்க முடியாது. என்று கூறுகின்றார். இத்தரவுகள் கம்பனிகள் தரப்பினரின் சாராம்சமாக கொள்ள முடியும். சம்பளப் பிரச்சினை தொடர்பான வதந்திகளும் பிழையான தகவல்களும் வழங்கபட்டுள்ள இன்றைய சூழலில் கம்பனிகள் சார்பாக வழங்கப்படும் தெளிவான நிலைப்பாடுகள் முக்கியத்துவம் மிகுந்தவையாக உள்ளன.
இவ்விடயங்களை சம்பள நிர்ணய சபையின் உறுப்பினரும் விவசாய தோட்டத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான S. கிருஸ்ணசாமி அவர்களிடம் வினவப்பட்டபோது அவர் கம்பனியின் முன்வைப்புகளை தர்க்கரீதியாக அணுகுகின்றார். அதாவது கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களும் கம்பனிகளும் தமது சுயநலத்தை மட்டுமே நோக்கமாக கொண்டு செயற்படுகின்றன என்கின்றார். சுமார் ஆறு வருடங்கள் 1000 ரூபாய் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்ற சூழலில் அது வெறுமனே பிரசாரப் பொருளாகியுள்ளது. இதன் மூலம் சில தொழிற்சங்கங்கள் அரசியல் ரீதியாக நன்மையடைந்துள்ளன.
இம்முறை ஆயிரம் ரூபாய் என்பது சம்பள நிர்ணய சபையின் அழுத்தம் மூலமே ஓரளவு அணுகப்பட்ட இலக்காகியுள்ளது. எனினும் கம்பனிகள் இவ்விடயத்தில் வாரத்துக்கு 3 நாட்கள் மாத்திரமே வேலை வழங்கப்படும் என்று கூறியுள்ளனர். அதாவது மாதம் ஒன்றுக்கு 13 நாட்கள் மாத்திரமே வேலைநாட்கள் வழங்கப்படும் என்பதாகும். சம்பள நிர்ணய சபையின் ஆணையாளரும் இவ்வாறான விடயங்களை இருதரப்பும் பேசியே முடிவு காண வேண்டுமென்று கூறியுள்ளார். எனவே இவ்விடயத்தில் கம்பனிகள் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அதேபோல் தொழிற்சங்கங்களின் பங்களிப்பும் இவ்விடயத்தில் காத்திரமானதாக இல்லை என்றுக் கூறுகின்றார்.
அதேப்போல் முதலாளிமார் சம்மேளனத்தின் பேச்சாளர் ரோசான் ராஜதுரையின் கருத்துக்களின் படி தேயிலையின் விலை தளம்பல் நிலை கொண்டதாயினும் எந்தவொரு காலத்திலும் கம்பனிகளுக்கு நட்டம் ஏற்படும் வகையில் சரிவு ஏற்படவில்லை. பொதுவாக எல்லாக் காலப்பகுதியிலும் கம்பனிகள் இந்த நட்டக்கணக்குகளையே முன்வைக்கின்றன. இந்த புள்ளிவிபரங்கள் கம்பனிகளாலேயே தயாரிக்கப்படுகின்றன. பின் எவ்வாறு இதன் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவது? அதேபோல் இன்று தோட்டக்கம்பனிகள் பல்வேறு மாற்று வருமானங்களை தோட்டங்களில் உள்ள வளங்களை பயன்படுத்தி மேற்கொள்கின்றனர். முகாமையாளர் பங்களாக்களை சுற்றுலா விடுதிகளாக மாற்றி லாபமீட்டும் கம்பனிகளும் உண்டு. அதேபோல் தேயிலை விற்பனை நிலையங்களை நடாத்துகின்றனர். அங்கெல்லாம் பணிபுரிவோர் தோட்டங்களில் பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களே. எனவே இந்த வருமானங்களை அவர்கள் லாபக்கணக்கில் என்றுமே காட்டியதில்லை. அதேபோல் முகாமைத்துவத்தின் தனிப்பட்ட செலவீனங்கள் அதிகமாக காணப்படுகின்றது. அவர்களின் சுகபோக வாழ்க்கைக்கு தோட்டங்களிலுள்ள வளங்களே உபயோகப்படுத்தப்படுகின்றன. இவையெல்லாம் இறுதியாக உற்பத்திச் செலவுடன் இணைக்கப்படுகின்றது. என்கின்றார்.
அதேபோல் மறுபுறம் ஒப்பந்தத்தில் ஈடுபடும் தொழிற்சங்கங்களில் ஒரு குறிப்பிட்ட தொழிற்சங்கம் ஏதேச்சதிகாரமாக செயற்படுகின்றது. ஏனைய தொழிற்சங்கங்களை கணக்கில் எடுப்பதில்லை. வரலாற்று ரீதியாகவே இவ்வாறு ஏதேச்சதிகாரமாக செயற்படும் தொழிற்சங்கம் இதுவரை மக்களின் சம்பள விடயத்தில் எவ்வித காத்திரமான விடயங்களையும் உட்புகுத்தவில்லை. ஆனால் அரசியல் ரீதியாக பிரசாரம் மட்டும் செய்துகொள்வர். அரசாங்கத்தின் தரப்பில் பார்க்கும்போது மக்களை பலவீனப்படுத்தவே அரசு சம்பள விடயத்தில் உள் நுழைந்துள்ளதாக நான் எண்ணுகின்றேன். குறிப்பாக கடந்த பேச்சு வார்த்தையின் பின்னர் தொழில் அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வாவின் கூற்றானது “ நாங்கள் 1000 ரூபாய் சம்பள உயர்வு பெற்றுக் கொடுத்துவிட்டோம். இனி மக்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய தேவை ஏற்படாது. அதுபோல் இனி ஏற்படும் நிலைமைகளுக்கு அரசு பொறுப்பேற்காது” என்றவாறு அமைந்துள்ளது. இது அவர்களற் கடமைக்கு பங்கேற்று உள்ளதையும் மக்கள் சார்பாக நடந்நு கொள்ளவில்லை என்பதையும் தெளிவாக காட்டுகின்றது என்று திரு ளு. கிருஸ்ணசாமி கூறுகின்றார். இக்கூற்றானது அரசாங்கம் தொடர்பாக மலையக மக்களிடையே நிலவும் கருத்தை ஆமோதிப்பதாகவே உள்ளது.
எனவே உள்ளுக்குள் இவ்வளவு விடயங்கள் முரண்பாடாக காணப்படுகின்ற சந்தர்ப்பத்தில் ஊடகங்களிடம் 1000 ரூபாய் பெற்றுக் கொடுத்து விட்டோம் என்று பொய்ப்பிரசாரம் மேற்கொள்கின்றனர். ஒவ்வொரு கூட்டு ஒப்பந்தத்திலும் தொழிலாளர்கள் நலன்கள் பறிக்கப்பட்டும், அவர்களின் தொழில் சுமைகள் அதிகரிக்கப்பட்டும் வந்திருக்கின்றன. அதன் தொடர்ச்சியாக இம்முறை தொழிலாளர்களை கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாக்கும் வகையில் மாதமொன்றுக்கு 13 நாட்கள் மாத்திரமே வேலை என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
கூட்டு ஒப்பந்தமானது கம்பனிகளுக்கு சாதகமான உட்கூறுகளை கொண்டிருக்கும் அதேசமயம் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களுக்கும் லாபகரமானதாகவே இருக்கின்றது. தோட்டங்களில் அரசியல் செய்வதற்கும், சந்தாப் பணத்தை கிரமமாக பெற்றுக்கொள்வதற்கும் கூட்டு ஒப்பந்தம் அவசியம். அதேபோல் பெருந்தோட்ட மக்களின் பிரதிநிதியாக தம்மை முன்னிலைப்படுத்திக் கொள்ள அவர்களின் தொழிலுடன் அரசியல்வாதிகளுக்கு ஒரு பிணைப்பு தேவைப்படுகின்றது. அது கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் சாத்தியமாகின்றது. இதனை முதலாளிமார் சம்மேளனத்தின் பேச்சாளர் ரோசான் ராஜதுரை அவர்களும் உறுதியாக கூறுகின்றார்.
மறுபுறம் கூட்டு ஒப்பந்தத்திலிருந்து கம்பனிகள் விலகினால் அது தொழிற்சங்கங்களுக்கு பாதிப்பாக அமையும் என்பதால் அவர்கள் கம்பனிகள் கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதை விரும்பவில்லை. கம்பனிகளின் சார்பில் தொழில் ஆணையாளருக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் தாம் கூட்டு ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளன. அதேபோல் தொழிற்சங்கங்களும் கம்பனிகள் விலகினால் அதற்கான போராட்டங்கள் இடம்பெறும் என்று அறிவித்துள்ளன. ஆனால் முன்னர் தாம் கோரும் சம்பளத்தை வழங்க முடியாமல் போனால் கம்பனிகள் தோட்டங்களை கையளிக்க வேண்டும் என இதே தொழிற்சங்கங்கள் கூறின.
இவ்வாறு கம்பனிகளின் பிடி இறுகும் சந்தர்ப்பத்தில் அவர்கள் முன் வைக்கும் நிபந்தனைகளை தொழிற்சங்கங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலை ஏற்படலாம். ஆனாலும் அவற்றை மக்களுக்கு மறைத்து தாம் சம்பளத்தை பெற்றுக் கொடுத்து விட்டதாக மேலும் தவறான தகவல்களை பரப்புவதற்கு வாய்ப்புள்ளதாக இத்தரவுகள் மூலம் அனுமானிக்க முடியும். அதில் தொழிலாளர் நலன்சார் விடயங்கள் பறிக்கப்படவே கூடுதலாக இடமிருக்கின்றது.
இவ்விடயங்கள் தொடர்பாக பொருளியலாளர்இ பேராசிரியர் ஏ.எஸ். சந்திரபோஸ் அவர்களிடம் கருத்துகள் வினவப்பட்டது. அவரின் ஆய்வுபடி முதலாளிமார் சம்மேளனத்தில் பேச்சாளர் கூறும் வகையில் 1000 ரூபாய் அரசியல் கோரிக்கை எனும் கருத்தை பொருளியலாளர் முற்றாக மறுதலிக்கின்றார். அதாவது இது வெறுமனே தோட்டத் தொழிலாளர்களை மட்டும் அடையாளப்படுத்த முடியாத பிரச்சினையாகும். அது ஒட்டுமொத்த மலையக சமூகத்தினதும் ஏகோபித்த கோரிக்கையாக மாற்றம் பெற்றுள்ளது. பல்கலைகழக மாணவர்கள், சிவில் அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து குழுக்களும் 1000 ரூபாய் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர். எனவே இது ஒரு தேசிய பிரச்சினையாகவே பார்க்கப்பட வேண்டும் என்கின்றனர்.
அதேபோல் முதலாளிமார் சம்மேளனம் கூறும் தேயிலை தொழில் துறையின் நட்டக்கணக்கு என்பது ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறுகின்றார். அதேபோல் அவர்களின் வரவுசெலவு கணக்குகளை அவர்களே தயாரித்து முன்வைப்பதானது அதன் நம்பகத்தன்மையை கேள்விக் குறியாக்குகின்றது. அவர்கள் கூறும் தேயிலை உற்பத்தி செலவை மூன்றாம் தரப்பு கணக்கியலாளர்கள் இதுவரை மதிப்பீடு செய்தது இல்லை என்பதும் பேராசிரியரின் வாதமாக உள்ளது.
மேலும் தொழிலாளர்களை அவர்கள் குறை சொல்வதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். பெருந்தோட்டங்களை எடுத்து பார்த்தால் இன்று அதிகமாக பழைய தேயிலையே பாவனையில் உள்ளது. மீள்நடுகை செய்யப்படுவதில்லை. ஆனால் தொழிலாளர்கள் அதே 18 முப கொழுந்தை பறிக்க வேண்டிய கட்டாயத்திலேயே உள்ளனர். உற்பத்தி அதிகரிப்பை பற்றி பேசும் போது முதலாளிமார் சம்மேளனத்தின் பேச்சாளர் கூறுவது போல் எவ்வாறு அறுவடையை அதிகரிப்பது? ஒரு தொழிலாளி 18 முப கொழுந்தை பறித்தால் அதிலிருந்து சுமார் 4 முப தேயிலைத்தூளை உற்பத்தி செய்ய முடியும். கடந்த வருடம் 1 முப தேயிலை ரூ. 560 இற்கு விலை போனது. எனவே கிட்டதட்ட 4 முப தேயிலையின் மூலம் ரூ. 2240 ஒரு நாளைக்கு வருமானம் கிடைக்கின்றது. இதில் 1000 ரூபாவையே தொழிலாளர்கள் கேட்கின்றனர். இது மிகவும் நியாயமான கோரிக்கையாகும். அதேபோல் இன்று ரூ.1000 தொழிலாளர்களுக்கு வழங்குவதற்கு இணக்கபாடுகள் எட்டப்பட்டுள்ள நிலையில் மறுபுறம் அவர்களின் தொழில்சார் நலன்கள் பறிக்கப்படவும் அதிகமான வாய்ப்பிருக்கின்றது. இது பற்றி தொழிற்சங்கங்கள் வாய் திறப்பதில்லை. நிபுணத்துவம் பெற்றவர்களுடனும் அவர்கள் ஆலோசிப்பதில்லை. இது எமக்கு பாரிய பின்னடைவு. எனவே பிழையான தகவல்கள் மக்களை சென்றடைகின்றன என்கின்றார்.
எனவே இவ்வாறான தகவல்களை பேச்சு வார்த்தையில் ஈடுபடும் நபர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். இன்று சம்பளம் எவ்வளவு முக்கியமோ அது போலவே அவர்களின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என பொருளியலாளர்கள் கருத்து கூறுகின்றனர். சம்பள நிர்ணய சபையின் உறுப்பினர் எஸ். கிருஸ்ணசாமி அவர்களின் கூற்றுபடி ஆராய்கையில் பேச்சு வார்த்தையில் பங்கெடுக்கும் தரப்பினர் முழுமையான தகவல்களை மக்களுக்கு வழங்க வேண்டும். அதனை அறிந்துக் கொள்ளக்கூடிய உரிமை தொழிலாளர்களுக்கு இருக்கின்றது. அதேபோல் சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் பட்சத்தில் அதற்கு கம்பனிகள் விதிக்கும் நிபந்தனைகளை தொழிற்சங்கங்கள் ஏற்றுக் கொள்வதற்கு முன்னர் அதனை துறை சார்ந்தோர் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
இப்பிரச்சினையானது இன்று நட்டாற்றில் தொழிலாளர்களை விட்டதுபோல் ஆகி விட்டது என்று சிரேஷ்ட சட்டத்தரணி தம்பையா அவர்கள் கூறுகின்றார். அவரின் கூற்றுப்படி சம்பள விடயத்தில் அரசாங்கம் தலையிட்டபோது தொழிற்சங்கங்கள் அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தியிருக்கலாம். நாட்டில் குறைந்தபட்ச வேதன சட்டம் (Minimum wages Act), கடை காரியாலய ஊழியர் சட்டம், இந்திய தொழிலாளர் சட்டம், இந்திய தொழிலாளர் குறைந்தபட்ச ஊழியர் சட்டம், கைத்தொழில் பிணக்குகள் சட்டம் ஆகியவை நடைமுறையில் இருக்கின்றன. ஆனால் அவற்றில் பெருந்தோட்ட சம்பளம் என்று தனியாக உள்வாங்கப்படவில்லை. இச்சட்டத்துடன் பெருந்தோட்ட குறைந்த பட்ச சம்பளம் சட்டமாக்கப்பட்டால் (Plantation minimum wages Act) இது சுலபமாக தீர்க்கப்படும் பிரச்சினையாகும். அதேபோல் இதற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மையும் பாராளுமன்றத்தில் அவசியமில்லை என்கின்றார் சட்டத்தரணி தம்பையா அவர்கள். அதிலும் பாராளுமன்றத்தில் இத்திருத்தத்தை சட்டமாக்க மூன்றிலிரண்டு தேவைப்படுமானால் அதுவும் தற்போதுள்ள அரசாங்கத்தில் சாதகமாக செய்யக்கூடிய விடயமேயாகும். எனவே தொழிற்சங்கங்கள் இவ்விடயத்தை திரிசங்கு நிலைக்கு கொண்டு வந்திருப்பதானது மக்கள் நியாயமான வேதனத்தை பெற்றுக் கொள்வதற்கு மேலும் சிக்கல்களையும் தாமதங்களையும் உருவாக்கும் நிலை தோன்றியுள்ளது.
Comments
Post a Comment