மலையக மாணவர்களின் உயர்கல்விக்கு தேசிய நிதியம் அவசியம்
அருள்கார்க்கி.
மலையக மக்களின் இனவிகிதாசாரம் கடுமையாக குறைந்துள்ள இச்சூழலில் அரசியல், சமூக ரீதியில் பல்வேறு சவால்களை சமகாலத்தில் நாம் சந்திக்க வேண்டியுள்ளது. உலகளாவிய ரீதியில் எழுச்சிப் பெற்றுவரும் அறிவுப் பொருளாதாரத்தில் இலங்கையும் குறிப்பிடத்தக்க அளவு தாக்கம் செலுத்துகின்றமை 21 ஆம் Áற்றாண்டின் நடுப்பகுதியிலேயே அவதானிக்கப்பட்டது. அந்தவகையில் சமகாலத்தில் அறிவுப்பொருளாதாரம் இலங்கையில் பிரதான அபிவிருத்தியாக மாறியிருக்கின்றது. கல்வி அபிவிருத்தியை பிரதான கதாபாத்திரமாகக் கொண்டு தேசிய உற்பத்தித் திறனை அளவிடும் குறிகாட்டிகள் இதனை தெளிவாக வரையறை செய்கின்றன. கல்விமுறை மாற்றம், இணையத்தின் அசுர வளர்ச்சி, நுகர்வுக் கலாசாரம் என்பன அறிவுப் பொருளாதாரத்தை உருவாக்குவதற்கு பிரதான பங்கு வகிக்கின்றன. ஒரு அபிவிருத்தி அடைந்து வரும் நாடாக இலங்கையும் இவ்விடயங்களில் பாரிய மாற்றங்களை சந்தித்துள்ளது.
இது இவ்வாறிருக்க இலங்கையில் நிலைமை பற்றி நாம் ஆராயுமிடத்து மலையகத்தின் அபிவிருத்தி பின்தங்கியுள்ளது. தேசிய கல்வி அபிவிருத்திக்கும் மலையகக் கல்விக்குமான இடைவெளி அதிகமாகக் காணப்படுவது இதன் பிரதான காரணமாகும். அறிவுப் பொருளாதாரத்தின் பிரதான Àண் கல்வி என்ற வகையில் மலையகக் கல்வியை சடுதியாக அபிவிருத்திச் செய்ய வேண்டிய தேவை எழுந்துள்ளது. தேசிய நீரோட்டத்தில் மலையகக் கல்வி தாமதித்தே உள்வாங்கப்படுவதன் காரணமாக நாம் அவ்விடத்திலிருந்து மலையக கல்வி அபிவிருத்தி குறிகாட்டிகளை அவதானிக்க வேண்டும்.
மலையக தோட்டப் பாடசாலைகள் முதல் மலையக பல்கலைக்கழகம் வரை நாம் கல்வியியல் ரீதியாக நகர்ந்திருக்கின்றோம். அந்த வகையில் மலையக கல்வியானது இன்று தேசியக்கல்வியுடன் சமமாக சவால்களை எதிர் கொண்டாலும் அவற்றுக்கான வளங்களை போதுமானளவு கொண்டிருக்கவில்லை. இது ஒரு சமநிலைத்தன்மை அற்ற போக்காகும். பாடசாலைகளின் தேவை, ஆசிரியர் வளம், பௌதீக வளங்கள், வழிகாட்டல் ஆலோசனை சேவைகள் என்பன பெருந்தோட்டங்களுக்கு விசேட தேவையின் நிமித்தம் éர்த்திச்செய்யப்பட வேண்டும். ஆயினும் அது அவ்வாறில்லாமல் ஒட்டுமொத்தமாக தேசிய ரீதியாகவே மாணவர்களின் அடைவு மட்டம் கணிப்பிடப்படுகின்றது.
மலையக உயர்கல்வியும் இந்நிலைமையை பெரும் சவாலாக எதிர்நோக்குகின்றமையை நாம் புறக்கணிக்க முடியாது. பொருளாதார ரீதியில் பின்னடைந்து இருக்கும் ஒரு உழைக்கும் சமூகமான நாம் மறுபுறம் உயர் கல்வியை பெற்றுக்கொள்வதற்கு ஏனைய சமூகங்களுக்கு இணையாக பணத்தை முதலிட வேண்டியுள்ளது. மிகவும் பின்தங்கிய வாழ்க்கை முறையை கொண்டுள்ள பெருந்தோட்டக் குடும்பமொன்று தமது பிள்ளைக்கான உயர்கல்வியை பெற்றுக்கொள்வதில் பாரிய சிரமத்தை சந்திக்கின்றது. பாடசாலை இடைவிலகல் முதல் பல்கலைக்கழக இடைவிலகல் வரை இன்று இந்நிலைமை தாக்கம் செலுத்துகின்றது.
மலையக மாணவர்களின் உயர்கல்வி எனும்போது வெறுமனே அதனை பல்கலைக்கழக மாணவர்களுடன் மட்டும் மட்டுப்படுத்தி விட முடியாது. இன்று தேசிய பல்கலைக்கழகங்களில் உள்வாரி மாணவர்களைப் போன்று வெளிவாரியாகவும் மாணவர்கள் பல்வேறு கற்கைநெறிகளை தொடர்கின்றனர். அதேப்போல் கல்வியற் கல்Âரிகள், தொழிற்பயிற்சி கலாசாலைகள், தனியார் உயர்கல்வி நிறுவனங்களிலும் மலையக மாணவர்கள் தமது உயர்கல்வியை தொடர்கின்றனர். உயர்கல்வித் தேவையும் கட்டாயமும் உணரப்பட்டுள்ள இந்நிலையில் எமது சமூகத்துக்கு காத்திரமான வலுëட்டலை வழங்குவதற்கான தேசிய பொறிமுறையே நிதியம் ஒன்றின் அவசியமாகும்.
கடந்த ஆண்டு வெளியாகிய உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் படி மலையகத்திலிருந்து ஏறக்குறைய 650 மாணவர்கள் தேசிய பல்கலைக்கழகங்களில் பல்வேறு பாடநெறிகளை தொடர்வதற்காக தகைமை பெற்றுள்ளார்கள். இவர்களில் பெரும்பாலானோர் பெருந்தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகளே. குறிப்பாக கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது இம்முறை அதிகமானோர் பல்கலைக்கழக தகைமைப் பெற்றிருப்பதன் காரணமாக நாம் பரந்துபட்டு செயற்பட வேண்டியுள்ளது. பல்கலைக்கழக மாணவர்களுக்கு மகாபொல உள்ளிட்ட ஒரு சில அரச மானியங்கள் கிடைக்கப்பெற்றாலும் அவை போதுமானதல்ல. அதேப்போல் ஒரு சில தனியார் நிதியங்களும், தனிநபர்களும் மாணவர்களுக்கான நிதிசார் உதவிகளை வழங்கி வருகின்றனர். இவ்விடத்தில் இவர்களின் பங்களிப்பை சீர்த்Àக்கிப் பார்க்க வேண்டும்.
எனினும் இவ்வாறான பங்களிப்புக்களை விடவும் அம்மாணவர்களின் உயர்கல்வி சேவைகள் செலவு மிகுந்ததாக இருக்கின்றது. அதனை ஈடுசெய்ய முடியாமல் அவர்கள் பல்கலைக்கழக வாய்ப்புக்களை புறந்தள்ளி தொழிலுக்கு செல்லக்கூடிய முடிவுகளை எடுக்கின்றனர். இந்நிலைமை எமது சமூகத்துக்கு பாரிய சவாலாக உருவெடுத்துள்ளது. இந்நிலைமையை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் அரசியல்வாதிகள் ஒரு சில உதவிகளை செய்து அவர்கள் குடும்பத்தை பின்னாட்களில் அடிமையாக்கும் முயற்சிகளும் இடம்பெறுகின்றன.
மறுபுறம் இவ்வாறான உயர் தகைமைகளைக் கொண்ட எமது மாணவர்கள் குறைந்த வேதனத்துக்கு தனியார் நிறுவனங்களை நாடும் நிலைமையும் தோன்றியுள்ளது. இந்நிலைமைகளுக்கு தீர்வாக பிறிதொருவரில் தங்கியிருக்காத கட்டமைக்கப்பட்ட அரச நிதியமொன்று அவசியம். மலையக கல்விக்கு ஆரம்பகாலம் தொட்டு பல்வேறு வெளிநாட்டு உதவி நிறுவனங்கள் தமது பங்களிப்பை வழங்கியுள்ளன. 1980 காலப்பகுதியில் தேசிய நீரோட்டத்தில் பெருந்தோட்ட கல்வி முறைமை உள்வாங்கப்பட்டது. சுவீடன் நாட்டின் (SIDA) மற்றும் ஜேர்மன் நாட்டின் (GTZ) ஆகிய அமைப்புக்கள் மலையக கல்வி அபிவிருத்திக்கு அடிப்படையிட்ட ஸ்தாபனங்களாகும். இவ்வமைப்புக்களின் மூலம் பாடசாலை கல்வி முதல் பௌதீக வசதிகளை மேம்படுத்துவது வரை இந்நிறுவனங்களின் பங்களிப்பு இன்றியமையாதது. அதேபோல் கலைத்திட்ட அபிவிருத்திக்கும் இந்நிறுவனங்கள் தமது பங்களிப்பை வழங்கின.
குறிப்பாக சீடா (SIDA) நிறுவனத்துடன் இலங்கை அரசு செய்து கொண்ட ஒப்பந்தத்தின் விளைவாக (1994 - 1999) பின்வரும் வரப்பிரசாதங்கள் கிடைத்தன.
1. பெருந்தோட்டப் பாடசாலைகள் கல்வி அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் (PSEDP)
2. ஆரம்ப பாடசாலைகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் (PSDP)
3. தொலைக்கல்வித்துறை (DSE)
4. விசேட கல்வி நிகழ்ச்சித்திட்டம் (SEP)
5. கல்வி முகாமைத்துவ அபிவிருத்தி முறை (DMED)
6. சூழலியற் கல்வி செயற்றிட்டம் (EEP)
இவ்வாறான பங்களிப்புக்களின் மூலம் மலையக கல்வி குறிப்பிடத்தக்க உட்கட்டமைப்பு அபிவிருத்திகளை அடைந்தது. எனினும் அக்காலத்தில் மலையக உயர் கல்வித்துறைக்கான திட்டமிடல்கள் எவையும் முன்னெடுக்கப்படவில்லை. ஆனால் இன்றளவும் நாம் உயர்கல்விக்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்மொழியா விட்டால் தேசிய கல்வி நீரோட்டத்துக்கு மலையகம் ஈடுகொடுக்க முடியாத அபாய நிலை தோன்றும். அவ்வாறான நிலைமை தோன்றுவதற்கு முன்னர் மலையக சிவில் சமூகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதில் பிரதானமானது மலையக பல்கலைக்கழகமும், தேசிய நிதியமொன்றுமாகும்.
இலங்கையில் தற்சமயம் புதிய அரசியலமைப்பு ஒன்றுக்கான வரைபுகள் முன்மொழியப்பட்டுள்ள சூழலில் இவ்விடயங்களுக்கான நகர்வினை நாம் விரைவுப்படுத்தப்பட வேண்டும். மலையக மக்களின் பிரதிநிதிகளுக்கு பாரிய கடமையொன்று இது. குறிப்பாக இந்திய அரசாங்கத்துடன் மலையக கல்வி அபிவிருத்தி தொடர்பான உரையாடல்கள் அதிகமாக இடம்பெற வேண்டும். அயல்நாடு என்றவகையில் மலையக மாணவர்களின் உயர்கல்விக்காக இந்திய அரசாங்கம் அதிகமான புலமைப்பரிசில்களை வழங்கி வருகின்றது. பட்டப்பின் படிப்புக்காக இந்திய பல்கலைக்கழகங்களில் வாய்ப்பளிக்கப்பட்டு வருகின்றது. அதேப்போல் நிதிசார் உதவிகளும் காலத்துக்கு காலம் வழங்கப்படுகின்றது. இவ்வாறான விடயங்களை மலையக தேசிய அபிவிருத்தியின் கீழ் கொண்டுவர வேண்டும்.
தற்சமயம் கொவிட் பரம்பல் தீவிரமடைந்துள்ள நிலையில் வெளிநாடுகளுக்கு பயணம் செய்வது சாத்தியமற்றது. எனவே இலங்கை பல்கலைக்கழகங்களில் மலையக மாணவர்கள் தமது உயர்கல்வியை தொடர்வதற்கான புலமைப்பரிசில்களை இந்திய அரசாங்கத்திடம் பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதேப்போல் ஏனைய நாடுகளின் வெளிநாட்டு உதவிகளையும் ஒழுங்கமைத்துக் கொண்டு அவற்றை முறைமைப்படுத்தி எமது மாணவர்களுக்கு பெற்றுக்கொடுக்க அமைப்பு ரீதியாக நகர்வுகளை முன்னெடுக்க வேண்டும்.
அரச கட்டுப்பாட்டில் இயங்கும் தேசிய நிதியம் ஒன்று உருவாக்கப்படும் பட்சத்தில் பரோபகாரிகளின் பங்களிப்புகளையும் அந்நிதியத்துக்கு பெற்றுக்கொண்டு எம்மவர்களுக்கு சேவைகளை வழங்கலாம். அதேப்போல் வெளிநாட்டு உதவிகளையும் நிதியத்திÇடாக ஒழுங்கமைக்கலாம். பல்கலைக்கழக மற்றும் கல்வியற் கல்Âரி உள்வாரி மாணவர்களுக்கு மாதாந்த உதவித்தொகையை வழங்கலாம். பட்டமேற்படிப்புகளுக்காகவும், துறைசார் ஆய்வு முயற்சிகளுக்கும் கொடுப்பனவுகளை வழங்க முடியும். நிதியமைச்சின் கண்காணிப்பின் கீழ் இந்நிதியம் இயங்கச்செய்வதும் அவசியம். நாட்டின் நிதிச்சட்டங்களுக்கு கட்டுப்பட்டு ஒழுங்கு முறையுடன் முன்னெடுக்கப்படும் பட்சத்தில் நம்பகத்தன்மையுடன் கூடிய ஒரு செயற்பாடு இடம்பெறும். அதிகாரத்தில் உள்ளவர்களின் கடமை இது. அதனை உணர்த்துவதே எம் பணி.
Comments
Post a Comment