மலையக கல்விச்சமூகத்தின் சமூகக் கடமை என்ன?
அருள்கார்க்கி
ஒரு சமுதாயத்தின் வளர்ச்சி அதன் கல்வியிலும் இளைய தலைமுறையினிடமும் தான் தங்கியிருக்கின்றது. கல்வியைப் புறக்கணித்து விட்டு எந்த ஒரு சமூகமும் முன்னேற முடியாது. அந்த வகையில் எமது இருப்பும் முன்னேற்றமும் அடிப்படையாக கல்வியை முன்னிருத்தியே காணப்படுகின்றது. மலையக கல்வியானது யாழ்ப்பாண ஆசிரியர்களை நம்பி இருந்து, பின்னர் தோட்டப் பாடசாலைகள் அரசுடமையாக்கப்பட்டு எம்மவர்கள் ஆசிரியர்களாகவும் கல்வித்துறை ஊழியர்களாகவும் பரிணமிக்கத் தலைப்பட்ட காலத்தில் மறுமலர்ச்சி அடைந்து மேலும் பாடசாலைகளுக்கு மேலதிகமாக ஆசிரியர் கலாசாலைகளும், கல்வியத் கல்Âரிகளும் மலையகத்துக்கென பிரத்தியோகமாக நிறுவப்பட்டு சேவை விஸ்தரிக்கப்பட்டது.
இன்றளவில் எடுத்துக்கொண்டால் தேசிய ரீதியில் தவிர்க்கமுடியாத இடத்தை மலையக கல்வித்துறை அடைந்துள்ளது. மலையக சமூகத்தின் மிகப்பெரும் ஆடம்பரமே பாடசாலைகளும் ஆசிரியர்களும் தான் என்றுக் கூறுமளவிற்கு இன்று கல்விக்கட்டமைப்பு வளர்ச்சிக் கண்டுள்ளது. தேசிய தொழிலாளர் படையில் கணிசமான அளவு இன்று மலையக சிறுபான்மைத் தழிழர் என்ற எமது அடையாளத்தால் நிரப்பப்படுகின்றது.
அதேப்போல் தனியார் துறையை எடுத்துக்கொண்டாலும் குறிப்பிடத்தக்க அளவு ஊழியர்களின் தேவையை நாம் பூர்த்திச்செய்கின்றோம். எனினும் ஓட்டுமொத்த சமூகத்தினை எடுத்து நோக்குமிடத்து நாம் பிற்போக்குச் சிந்தனையிலும், சுரண்டப்படும் கூலிகளாகவும், உரிமைகள் குறித்த தெளிவற்றவர்களாகவும் இன்றும் இருப்பதற்கு என்ன காரணமென்று ஆய்வு செய்வது பொருத்தமானது. மேலும் ஒவ்வொரு வீட்டிலும் இன்று படித்த ஒருவர் இருந்தும் ஏன் எமது சமூக மீட்சி அசாத்தியமானதாக இருக்கின்றது என்ற கேள்வி எழுகின்றது.
இதற்கான பிரதான காரணம் கல்விச் சமூகம் சமூக அந்தஸ்திலும், பொருளாதாரத்திலும் உயர்வை அடையும் போது சாதாரண சமூகக்கட்டமைப்பில் இருந்து விலகிச்செல்கின்றனர். தமது சொந்த தேவைகளின் நிமித்தமும் பிள்ளைகளின் கல்வி போன்ற தேவைகளுக்காகவும் இவர்களின் நகர்வு நகர்ப்புறங்களை நோக்கியதாக இருக்கின்றது.எனவே இதுபோன்ற ஒரு சமூக உபகுழு தனித்துச்சென்றுவிடுவதால் மீண்டும் சராசரி சமூகம் கைவிடப்படுகின்றது.
தோட்டத் தொழிலாளர்கள் என்ற ரீதியில் எடுத்துநோக்குமிடத்து எம்மை அடையாளப்படுத்தும் ஒரு பிரிவினர் என்றால் அது அவர்கள் தான். எனினும் எவ்வளவுக் காலத்திற்கு அவர்கள் அடிப்படை வசதிகளற்ற வாழ்விடங்களிலும்,போதிய வருமானம் இல்லாத தொழிலிலும் நீடித்து எமக்கு அடையாளத்தை கொடுக்க முடியும். குறிப்பாக ஆசிரியர் என்ற ரீதியில் பார்ப்போமானால் மலையக சிறுபான்மை இனம் என்ற சிறப்பு ஒதுக்கத்திலேயே பெரும்பாலான தொழில் வாய்ப்புக்கள் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.
இவ்விடத்தில் எமது அடையாளமும் இன விகிதாசாரமும் இல்லாமல் இருப்பின் எமக்கான இதுபோன்ற வாய்ப்புகள் கிடைத்திருக்குமா என்பதை சற்று மீட்டிப்பார்க்க வேண்டும். எம்மைப்போன்ற இனஒடுக்கு முறைக்கு ஆளான சமூகத்திற்குÉ கற்றவர்களின் வழிக்காட்டலும் உதவியும் தவிர்க்க முடியாதவை. எடுத்துக்காட்டாக மொழி சமத்துவம்,காணிஉரிமை குறித்து விவாதிக்கும் போது அடிமட்ட தொழிலாளர்கள் மட்டுமே முன்னிலைப் படுத்தப்படுகின்றனர். அரச ஊழியர்களாகவோ அல்லது தனியார் ஊழியர்களாகவோ பணியாற்றும் எம்மவர்களின் இடம் இங்கு வெற்றிடமாகவே காணப்படுகின்றது.
ஓட்டுமொத்த மலையக சமூகழும் இன்று இந்நாட்டில் பாரபட்சமாக நடாத்தப்படுவதற்கு உதாரணங்கள் முன்வைக்கத் தேவையில்லை. காரணம் எம்மவர்கள் எந்த மட்டத்தில் இருந்தாலும் அங்கு இரண்டாந்தர இடமே வழங்கப்படுகின்றது.இதனை உணராமல் எவரும் இல்லையெனினும் சுயலாபம் கருதி மௌனிகளாகவும், செயற்படாமலும் இருக்கின்றனர்.
உண்மையில் எமது சமூகத்தைப் பொறுத்த வரையில் கல்விச்சூழல் நெருக்கடியானது என எவரும் வாதிட முடியாது. காரணம் இன்றளவில் பாடசாலை மட்ட கல்வி வாய்ப்புக்கள் ஒரளவு சுதந்திரமாகவே உள்ளன. எனினும் எனது கேள்வி என்னவெனின் ஏன் எமது பாடசாலைகள் சமூகத்தின் வழிகாட்டியாக இன்னும் மாறவில்லை என்பதே ஆகும். பாடதிட்டங்களும், வகுப்பறைக் கற்பித்தலும் தொழிலாளர்களை உற்ப்பத்திச் செய்யலாம். இப்பணிகளைச் செய்வதற்கான ஊதியத்தை ஆசிரியர்கள் பெற்றுக் கொள்ளலாம். எனினும் சமூக நோக்குக் குறித்தும் உரிமைகள் குறித்தும் மாணவ சமுதாயத்தை தெளிவடையச் செய்யும் கடமையும் மேலதிகமாக ஆசிரியர்கள் கையில் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது. நாம் எதிர்பார்ப்பது எல்லாம் இவர்களின் பணி பாடசாலைக்கு வெளியே சமூக மீட்சிக்காக பயன்பட வேண்டும். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தாம் கற்றோர் என்று ஒதுங்கிச் செல்லும் போக்கு ஆரோக்கியமானதல்ல. மாறாக இவர்களே இப்போராட்டங்களில் முன்னிற்க வேண்டும்.
குறிப்பாக இன்று மலையக மக்களின் காணி உரிமைக்குறித்த சிந்தனைகள் பரவலாக முன்வைக்கப்படுகின்றன. இது விடயத்தில் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கற்ற சமூகத்தினரே செயற்பட வேண்டும். அதிலும் நாம் தலைகுனிய வேண்டிய சூழலை அரசியல்வாதிகளுக்கு பின்சென்று ஊழியம் செய்யும் ஆசிரியர்கள் ஏற்ப்படுத்திவிடுகின்றனர்.எதுவித சமூக பிரக்ஞையுமற்று இது போன்று அதிபர் பதவிகளுக்காகவும் இடமாற்றம், போன்ற அற்ப சலுகைகளுக்காகவும் அரசியல்வாதிகளின் கால்களைப் பிடித்துக்கொண்டிருப்பதை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
எமது சமூகம் உற்ப்பத்திச் செய்யும் ஆளணி கல்விச்சமூகம் தான். எனவே இங்குள்ள சமூகக்கடமையில் எனக்கென்ன பங்கு என்று ஒவ்வொருவரும் உணர வேண்டும். காரணம் தனிமனித வெற்றிகலால், அல்லது முன்னேற்றத்தால் எந்தப்பயனும் இல்லை. மாறாக அது சமூகத்தின் வெற்றியாக அமைய வேண்டும். அதற்கு ஆசிரியர்கள் முன்வரிசையில் நிற்க வேண்டும்.
Comments
Post a Comment