பொதுப்புத்தி அரசியல்
-அருள்கார்க்கி-
அனைவரும் அரசியல் பேசும் தேர்தல் காலம் முடிந்து வழமைக்கு திரும்பியுள்ள மலையத்தினைப் பற்றிய மீள்வாசிப்பு இது. காலத்துக்குக் காலம் மலையக அரசியல் சமூக தளத்தில் சில பேசுப்பொருட்கள் பிரபலம் பெரும். அதாவது சம்பளப்பிரச்சினை , தொழிற்சங்க போராட்டம், காணியுரிமை, மண்சரிவு, உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்கள், லயன்கள் தீப்பிடித்தல், சிறுத்தை , குளவி பிரச்சினைகள் என அவை விரிவடைந்துச் செல்லும்.
இவை அனைத்தையும் கடநது தேசிய அரசியல் ஏற்படும் சலசலப்புக்களும் மலையக தளத்தில் அதிர்வுகளை ஏற்ப்படுத்துவதும் உண்டு. மக்கள் பிரச்சினைகளை அவர்களகவே உணர்ந்து வீதிக்கு இறங்கி போராடுவதும், அரசியல் நோக்கங்களுக்காக சிலர் மக்களை போராட வைப்பதும் இருவகைப்பட்ட சமூக அதிர்வுகள். காரணம் இங்கு முதலாவது வகையைவிட இரண்டாவது பிரிவு போராட்டங்களில் மக்கள் வெறும் கருவிகளே தவிர வேறொன்றுமல்ல.
மக்கள் தமது உரிமைகள் பற்றி சிந்திக்காத வண்ணம் அவர்களை கட்டுப்படுத்தி வைக்கும் முதலாளித்துவ அரசியல் சிந்தனையை அடக்குமுறை ஆட்சி என்று விளிக்கலாம். ஜனநாயகநாடுகளின் பெரும்பாலும் காணக் கிடைக்கும் அவலம் இது. நவீன உழைப்புச் சுரண்டல், சிந்தனையை கட்டுப்படுத்தல், சலுகை விடயங்களுக்கு சமூகத்தை இயைபாக்கமடையச் செய்தல் என்பன இவற்றின் பிரதான மூலக்கூறுகள்.
மலையக அரசியலிலும் மக்கள் மயப்பட்ட போராட்டங்களை விட அரசியல் அனுகூலம் கருதி மக்களைக் கொண்டு லாபமடையும் சம்பவங்கள் அனுதினம் அரங்கேருகின்றன. குறிப்பாக மக்கள் விழித்துக்கொள்ளாமல் இருக்கவென தோட்டங்களில் தலைவர்கள் மூலம் மக்களை மடக்கும் நுண்ணரசியல் நடக்கின்றது. அனைவரும் நம்பும் ஒன்றை நாமும் நம்ப வேண்டும் எனும் பொதுப்புத்தியை பாமர மக்களிடம் லாவகமாகப் பரப்புகின்றனர். தனி ஒரு நபர் மாற்றுக் கருத்துக்களை வெளியிட்டால் அதனை பெரும்பான்மையானவர்கள் விமர்சிப்பது இதன் காரணமாகத்தான்.
குறிப்பாக ஒரு உதாரணத்தை எடுத்துக் கொண்டால் தோட்டங்களில் இயங்கி வரும் தொழிற்சங்கக் கட்டமைப்புக்களை கூறலாம். மாற்றுச் சிந்தனையாளர்கள் முன்வைக்கும் கருத்துக்களுக்கு அனேகம் பேர் விமர்சிப்பதÇடாகவும், தனி ஒருவரால் எதனையும் சாதிக்க முடியாது போன்ற எதிர்மறை கருத்துக்களை திணிப்பதன் மூலமும், மாற்றுக்கருத்துக்களை வளரவிடாமல் செய்கின்றனர். குறிப்பாக அனைவரும் ஒரு கட்சியில் இருந்தால் தான் தோட்டத்திற்கு அபிவிருத்திகளைக் கொண்டுவர முடியும் என்றும் , இல்லாது போனால் சிறுபான்மையால் பாதகமான சம்பவங்கள் நடக்கும் என்றும் ஒரு பிழையான புரிதல் இன்று மலையக சமூகத்தில் வேறுன்றியுள்ளது.
அபிவிருத்திகள் எனப்படுவது அனைவருக்கும் பொதுவானதுதான் அதற்குத்தான் வாக்களிக்கின்றோம், வரி செலுத்துகின்றோம். இதற்கு மேலதிகமாக தொழிற்சங்கத்திற்கு சந்தாப்பணம் செலுத்தினால் தான் அபிவிருத்தி தோட்டத்திற்கு வரும் எனும் அரசியல் பிரச்சாரம் மக்களை ஏமாற்றும் கைங்கரியமே அன்றி வேறேன்ன?
குறிப்பிட்ட ஒரு தோட்டத்தை எடுத்துக்கொண்டால் அங்கு ஆதிக்கம் செலுத்தும் அரசியல் கட்சிக்கு ஆதரவு அளிக்தாக É மாற்றுக் கட்சி ஆதரவளர்கள் மறைமுகமாகவும் பொதுப்படையாகவும் பழிவாங்கப்படுவதுண்டு. இதன் மூலம் ஆதிக்கச் சிந்தனையாளர்கள் மாற்றுக் கருத்துக்களை வளரவிடாமல் செய்கின்றனர். எம் மக்களிடம் இல்லாத உரிமை உணர்வும் போராட்ட குணமும் இதனை அரசியல்வாதிகள் இலகுவாகச் சாதித்துக் கொள்ள பெரும்பாலும் உதவுகின்றது.
தோட்டப்பாதைக்கு கொங்கிரீட் இடுதல், கோயில்களுக்கு உபகரணங்கள் வழங்கல் இவையிரண்டும் மலையக அபிவிருத்திக்கு இன்றியமையாத அடிப்படைத் தேவைகள். எனவேதான் அரசியல் வாதிகள் கடும் பிரயத்தனத்துக்கு மத்தியில் பாதை செப்பனிடும் பணியைத் தொடர்கின்றனர். இதிலுள்ள இலாபம் என்னவென்றால் மக்களின் ஏகோபித்த வரவேற்பினைப் பெற்றுக் கொள்ள அனைவருக்கும் பொதுவான ஒன்றை தோட்டத்திற்கு செய்துவிட்டால் தனித்தனியாக மக்கள் அடிப்படைத் தேவைகளை கேட்க மாட்டார்கள் எனும் தெளிவான இணங்காணல் ஆகும்.
இங்கு பாதையும், கோயிலும் முக்கியம் அல்ல என்ற கருத்தில்லை. பாதை சீராக இருக்கும் தோட்டங்களில் சுகாதார வசதிகளும், மக்களின் குடியிருப்புக்களும் மிகவும் கீழ் மட்டத்தில் இருப்பதற்கு போதுமான உதாரணங்கள் உண்டு. கொங்கிரீட் பாதைகளில் ஆயட்காலமும் மாகாண சபைகளின் ஆயுட்காலமும் சமாந்தரமாகச் செல்வதால் மீண்டும் அடுத்த தேர்தலுக்கு அதே பாதையை சீரமைத்த சம்பவங்கள் உண்டு.இதுபோன்ற அபிவிருத்திகளுக்கு மக்களை இயைபாக்கம் அடையச்செய்வதே அரசியலில் ஏமாற்றும் தந்திரம். அனைவரையும் ஒரே முறைமையின் கீழ் சிந்திக்கச் செய்வதும் அதற்கேற்ப செயற்பட வைப்பதும்தான் சமூகப் பொதுப்புத்தியை உருவாக்குகின்றது.
அதிகாரம் செய்யும் கும்பலுக்கு இந்தச் சமூகப் பொதுப் புத்தி இன்றியமையாதது. இதனைக் சாதுரியமாகக் கட்டமைப்பதில் அரசியல்வாதிகள் திறமையானவர்கள். மக்களுக்கு தனிப்பட்ட ரீதியில் பிரச்சினைகளை சந்திக்காத வண்ணம் இருக்க இந்தப் பொதுப்புத்தி ஒரு கவசம் போன்றது. எனவே பாமர மக்களும் இதனை ஏற்றுக் கொள்கின்றனர்.மாற்றுக் கருத்துக்களுக்கு வாய்ப்பளிப்பதன் மூலம் இதனை மாற்றியமைக்கலாம் எனினும் சமூகக்கட்டமைப்பை தீர்மானிக்கும் மேல்நிலை வழிப்படுத்துணர்கள் இதனை கட்டுப்படுத்துவர். மரபுரீதியான குடும்பத்தலைமை முறைமை , கட்சிகள் நபர்களின் மேல் உள்ள அபிமானம் என்பன மறுவாசிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும். அது அவ்வாறு நடந்தால் இதனைச் சற்று சீரமைக்கலாம். எனினும் அதற்கு சமூகப்புரிதலும், உரிமை வேட்கையும் உள்ள கற்றவனிடன் வீடும் , சமூகமும் ஒப்படைக்கப்பட வேண்டும்.
Comments
Post a Comment