இரசாயன உரத்தடை – சில கேள்விகள்
அருள்கார்க்கி.
நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் இரசாயன உரங்களை முற்றிலுமாக தடை செய்ய அரசாங்கம் அண்மையில் முடிவெடுத்திருந்தது. இவ்விடயமானது பயிர்ச்செய்கையில் ஈடுபடும் சமூகங்களின் பரவலான விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ள இச்சூழலில், இது குறித்தான கருத்தாடல்கள் முக்கியத்துவம் மிக்கதாகின்றன. இதுவரைக் காலமும் நெல், மரக்கறி உள்ளிட்டவற்றுக்கும் தேயிலை, தென்னை, இறப்பர் முதலான பெருந்தோட்ட பயிர்ச்செய்கைகளுக்கும் இரசாயன உரமே பயன்படுத்தப்பட்டு வந்தன. இவற்றின் மூலம் விவசாயிகள் உள்நாட்டு உற்பத்திகளான நெல், மரக்கறி மற்றும் பழவகை என்பவற்றை உள்நாட்டு, வெளிநாட்டுச் சந்தைகளுக்கும் குறிப்பிட்டளவு உற்பத்திகளை செய்யக் கூடியதாக இருந்தது. இரசாயன உரங்கள் மற்றும் மருந்துகளால் விளைச்சல் அதிகமாகவும் கிடைத்தமை குறிப்பிடத்தக்கது. ஆனால் இன்று சடுதியாக அரசாங்கம் இரசாயன உரங்களை தடை செய்யும் தீர்மானமானது விவசாய சமூகங்களின் மத்தியில் உருவாக்கியுள்ள வினாக்களை ஆய்வு செய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
இதுவரைக் காலம் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட இரசாயன உரங்களை தடை செய்வதற்கு அரசாங்கம் எடுத்த முடிவுக்கு விவசாய அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே விளக்கமளித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்சவின் சுபீட்சத்துக்கான நோக்கு வேலைத்திட்டத்தில் குறிப்பிடப்பட்ட நச்சுத்தன்மையற்ற உணவு உற்பத்தியை நோக்கமாகக் கொண்டே இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் இரசாயன உரமானது ஏற்படுத்தும் நோய்கள், மற்றும் சூழல் பாதிப்புக்களை கருத்திற் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இலங்கையின் ஆண்டொன்றுக்கான இரசாயன உரப் பாவனை 1.3 மில்லியன் மெற்றிக் தொன்களாகும். முன்னர் இத்தொகை குறைவாக காணப்பட்டது. உரமானியம் அரசால் வழங்கப்பட்டதன் பின்னர் இருமடங்காக பாவனை அதிகரித்துள்ளது. இந்த இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதற்காக ஆண்டொன்றுக்கு 400 மில்லியன் டொலர்களை அரசாங்கம் செலவிடுகின்றது. அதேபோல் 40 மில்லியன் ரூபாயும் தனியார் உர இறக்குமதி நிறுவனங்கள் 25 மில்லியன் ரூபாய்களும் செலவிடுவதாகவும் அறியக்கூடியதாக உள்ளது.
இது அரசுக்கு ஒரு பாரிய செலவீனமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. மறுபுறம் இரசாயன உரங்களை பயன்படுத்தி உற்பத்திச் செய்யப்படும் உணவுகளை உண்பதால் புற்றுநோய், சிறுநீரக பாதிப்பு, பக்கவிளைவுகள் என்பவற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்கு அரசு வருடாந்தம் 80 பில்லியன் அமேரிக்க டொலர்களை மருந்துகளுக்காகவும் சிகிச்சைக்காகவும் செலவிடுகின்றதாகவும் அறிய முடிகின்றது.
அதேபோல் இதனால் ஏற்படும் சூழல் பாதிப்புக்களை நீர் மாசு, மண்ணின் அவசியமான தாதுப்பொருட்கள் அழிந்து போதல் என்பனவும் அண்மைக்காலத்தில் சடுதியாக அதிகரித்துள்ளன. இந்நிலைமைகளை கருத்திற் கொண்டு கொண்டே இயற்கை உரங்களை பயன்படுத்துவதற்கான ஊக்குவிப்புக்களை அரசாங்கம் முன்னெடுத்து உள்ளது. இதன் முதற்கட்டமாகவே இரசாயன உரங்களை தடை செய்துள்ளது. எனவே இரசாயனமற்ற இயற்கை உரங்களை விவசாயிகளுக்கு வழங்குவதற்கான பொறிமுறை ஒன்றை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக விவசாய அமைச்சர் கூறுகின்றார். ஆனால் அவ்வாறான தயார்படுத்தல்களை காணமுடியவில்லை. என விவசாய அமைப்புகள் கூறுகின்றன.
உரத்தடை தன்னிச்சையான முடிவா?
கந்தசாமியின் கதை
அப்புத்தளை தம்பேத்தனையில் 50 வயதுடைய கந்தசாமி முழுநேர மரக்கறி பயிர்ச்செய்கையாளராவார். சுமார் 1 ஹக்டேயர் விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து மரக்கறி உற்பத்தியில் ஈடுபடுகின்றார். உரத்தடையில் மாற்று வழிமுறை ஒன்றை நாடுவது எவ்வாறு என்பதான திட்டம் எதுவும் அவரிடம் இல்லை. அவரின் கருத்து இவ்வாறு அமைகின்றது.
“நான் கடந்த 30 வருடங்களாக மரக்கறி பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு வருகின்றேன். எமது குடும்பத்தின் பிரதான வருமான மார்க்கமே மரக்கறி தோட்டம் தான். அந்தவகையில் நிலத்தை குத்தகைக்கு எடுத்தே நாங்கள் பயிர்ச்செய்கையில் ஈடுபடுகின்றோம். அதிகமான பணத்தையும் முதலீடு செய்துள்ளோம். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள உரத்தடையானது எமக்கு பெருத்த சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது. இரசாயன பாவனை அற்ற உணவு உற்பத்தியானது சிறந்த விடயமானாலும், அது உடனடி சாத்தியமாகாத விடயம். இரசாயன உரங்களை நீண்ட காலம் பயன்படுத்தியதால் மண்ணின் தன்மை மாற்றமடைந்துள்ளது. (Pர் பெறுமானம்) எனவே இதனை உடனடியாக இயற்கை பதுளைக்கு மாற்றியமைப்பது கடினமான விடயமாகும்.
அதேபோல் ஒப்பீட்டளவில் இயற்கை உரத்தை பயன்படுத்தி செய்வதை விடவும், இரசாயன உரத்தினால் எமக்கு விளைச்சல் அதிகமாக கிடைத்தது. இது உற்பத்தி செலவை குறைத்து கொள்வதற்கான சிறந்த வழிமுறையாகும். களைகளை கட்டுப்படுத்துவது, éச்சிகளை அழிப்பது போன்ற வேலைகளையும் இரசாயன முறையை போல் இயற்கையான வழிமுறைகளால் சாத்தியப்படுத்துவது கடினமாகும். எனவே இதற்கான மாற்றுத்தீர்வை அரசாங்கம் முன்வைக்கவில்லை” என்கின்றார் கந்தசாமி.
மரக்கறி செய்கையில் 30 வருடகாலம் அனுபவமுடையவர் கந்தசாமி. இந்த உரத் தடையால் தற்போது அவரின் நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள கேரட் மற்றும் லீக்ஸ் ஆகியவற்றுக்கு தேவையான இரசாயன உரத்தை பெற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கின்றார். ஆனால் அரசாங்கம் தற்சமயம் பயிரிடப்பட்டுள்ள உணவுப்பொருட்களுக்கான உரம் கையிறுப்பில் உள்ளதாக கூறுகின்றது. இது பற்றி அவரிடம் வினவினேன். அதற்கு கந்தசாமியின் விளக்கமானது இவ்வாறாக அமைகின்றது.
“தற்போது நாம் பயன்படுத்தும் விதைகள் இரசாயன முறையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு மேம்படுத்தப்பட்ட விதைகளாகும். அவற்றுக்கு இரசாயன உரங்களே தேவைப்படும். மாறாக இயற்கை பசளைகளை பயன்படுத்துவதால் எதிர்பார்க்கும் விளைச்சலை பெற்றுக் கொள்ள முடியாது. அதேபோல் இயற்கை உரங்களை பாவிப்பதானால் அவற்றை நாற்றக்கள் அல்லது விதைகள் இடுவதற்கு முன்னரே மண்ணில் பதப்படுத்த வேண்டும். அதன் பின்னர் தான் கன்றுகளை நாட்ட வேண்டும். ஆனால் இரசாயன உரப்பாவனை அவ்வாறல்ல. விளைச்சலின் தரம், நோய்த்தாக்கங்களை பொறுத்து தேவையான அளவு பயன்படுத்தலாம். இயற்கை பசளைகளால் உடனடி விளைச்சலை எதிர்பார்க்க முடியாது. அதற்கு அதிக காலமெடுக்கும் என்கின்றார். இது ஏற்றுக்கொள்ளத்தக்க ஒரு வாதமாக தோன்றுகின்றது. விதைகள் முதல் மண்ணின் அமிலத்தன்மை முதல் இரசாயன முறையில் உருவாக்கப்பட்டிருக்கும் சூழலில் தற்போது பயிரிடப்பட்டுள்ளவற்றின் மீது இயற்கை உரத்தை பயன்படுத்துவது சாத்தியமற்றதாகவே தோன்றுகின்றது.
அதேபோல் அவர் மேலும் கூறுகையில் அரசு சடுதியாக உரத்தடையை அறிவித்தவுடன் வசதி படைத்தவர்கள் அதிகமாக கொள்வனவு செய்து சேமித்து வைத்துக் கொண்டனர். அனேகமான கடைகளில் உரங்களை பதுக்கி வைத்துக் கொண்டனர். எனவே தற்சமயம் பயிரிடப்பட்டுள்ளவற்றுக்கு உரங்களை பெற்றுக் கொள்ள முடியாமல் உள்ளது” என்கின்றார்.
உண்மையில் தற்போதைய சிறுபோகத்துக்கு தேவையான இரசாயன உரம் கையிறுப்பில் உள்ளதாகவும் அடுத்துவரும் பெருபோகத்துக்கே உரத்தட்டுப்பாடு நிலவும் என்று அரசு அறிவித்துள்ளது. ஆனால் மலையகத்தில் வருடத்தின் அனைத்து நாட்களும் மரக்கறி பயிர்ச்செய்கை இடம்பெற்றுக் கொண்டுதானிருக்கும். எனவே தற்சமயம் கந்தசாமி போன்ற விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு தீர்வை தரப்போகின்றவர்கள் யார் என்ற வினா எழுகின்றது. பதுக்கப்பட்டுள்ள உரங்களை கருப்புச் சந்தைêடாக அதிகமான விலைக்கு சில வர்த்தகர்கள் விற்பதாகவும் கந்தசாமி குற்றஞ் சுமத்துகின்றார். இதனை ஒத்த கருத்தை வெளிமடை, பதுளை பிரதேச விவசாய அமைப்புக்களும் ஊடக சந்திப்புக்களில் தெரிவித்துள்ளன. எனவே அவற்றை முறையாக பகிர்ந்தளிப்பதற்கும் அரசிடம் திட்டம் எதுவுமில்லை என்பதும் வெளிப்படுகின்றது.
உடனடி இயற்கை உரப் பாவனை சாத்தியமா?
கந்தசாமியின் அனுபவத்தின் படி மலையகத்தில் பெரும்பாலான விவசாயிகளின் கதை இவ்வாறு தான் உள்ளது என்பது இவ்வாய்வுக்காக பயணம் செய்த போது அறியக்கிடைத்தது. இரசாயன உரத்தடையை தொடர்ந்து ஆட்டெரு, மாட்டெரு உள்ளிட்டவற்றின் விலைகள் கடுமையாக அதிகரித்துள்ளன. 20 முப அளவினை மாட்டெரு முன்னர் 30 – 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்சமயம் அது 200 தொடக்கம் 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் நிலை தோன்றியுள்ளது. அதிலும் அவற்றை அதிகமாக பிரயோகிக்க வேண்டியிருப்பதால் கந்தசாமி போன்றவர்கள் பாரிய நெருக்கடியை எதிர்நோக்குகின்றார்கள். அவற்றுக்கான நிர்ணய விலை என்று எதுவுமே இல்லாத காரணத்தால் இயற்கை பசளை விற்பனையாளர்கள் அதிக விலைக்கு விற்பனை செய்வதாக கந்தசாமி கூறுகின்றார். அதேபோல் படிப்படியாக இரசாயன உரப் பாவனையை இழிவளவாக்கியிருந்தால் விவசாயிகள் இயற்கை உற்பத்தி முறைக்கு தயாராகியிருப்பார்கள். அதேபோல் தெரிவு செய்யப்பட்ட பிரதேசங்களில் பரீட்சார்த்தமாக இம்முறையை நடைமுறைப்படுத்தி இருந்தால் இதில் சவால்களை அதற்கேற்றால் போல் அடையாளமிட்டு நடவடிக்கை எடுத்திருக்கக்கூடிய வாய்ப்பும் அரசாங்கத்துக்கு இருந்ததாக விவசாய சங்கங்கள் கூறுகின்றன.
தீர்வுகள் என்ன?
அரசாங்கம் இயற்கை உரங்களை இறக்குமதி செய்வதற்கான முயற்சிகளை தற்சமயம் மேற்கொண்டுள்ளது. அவ்வாறு இறக்குமதி செய்யப்படும் சந்தர்ப்பத்தில் அவற்றின் தரம், விலை, பாதிப்புக்கள் என்பன குறித்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதேபோல் இலங்கையின் மண் அமைப்பு, மண்ணின் அமிலத்தன்மை, காலநிலை, என்பவற்றினை கருத்திற் கொண்டே இயற்கை உரங்களை இறக்குமதி செய்ய வேண்டும் என்று விவசாய சங்கங்கள் தெரிவிக்கின்றன.
இயற்கை உரங்களை இலங்கையில் உற்பத்திச் செய்வதும் இதற்கு ஒரு தீர்வாக அமையும். இயற்கை உரத்துக்கு அவசியமான பொசுபேட் (Phழளிhயவந), பொட்டாசியம் (Potassium), மற்றும் நைட்ரஜன் (Nitrogen) ஆகியவற்றை இலங்கையில் தாராளமாக பெற்றுக் கொள்ள முடியும். எடுத்துக்காட்டாக நாளொன்றுக்கு உள்ராட்சி மன்றங்களில் சேகரிக்கப்படும் கழிவுகள் 8000 மெற்றிக் தொன்களாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே அவற்றை முறையாக பதப்படுத்தி இயற்கை பசளைக்கு தேவையான நைட்ரஜனை பெற்றுக் கொள்ளலாம். ஆனால் இதுவரை அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படாமை அரசாங்கத்தின் தூர நோக்கற்ற செயற்பாடாகவே அவதானிக்கப்பட வேண்டும்.
தனியார் துறையுடன் இணைந்து இந்த வேலைத்திட்டங்களை முன்னெடுக்கலாம். விவசாயிகளுக்கு பயிற்சியளிப்பதும், இயற்கை உரங்களை கிராமிய, தோட்ட மட்டங்களில் உற்பத்திச் செய்பவர்களுக்கு மானியங்களை வழங்குவதாலும் நிலைமையை ஓரளவுக்கு சமாளிக்கலாம். எவ்வாறாயினும் தற்போது பயிரிடப்பட்டிருக்கும் விளைச்சல்களுக்கு பாதிப்பு ஏற்படுமானால் அதற்கான நட்ட ஈட்டை அரசாங்கம் செலுத்த வேண்டும் என்பதே கந்தசாமியின் கூற்றாகவுள்ளது. பெரும்பாலான விவசாயிகளின் கோரிக்கையும் அதுதான்.
Comments
Post a Comment