பின்னோக்கி பயணிக்கும் பெருந்தோட்ட தொழிற்துறை
அருள்கார்க்கி
பெருந்தோட்ட தொழிற்துறை என்பது இன்று முரண்பாடுகள் மிகுந்ததாகவும் வன்முறையானதாகவும் பரிணாமம் பெற்றுள்ளது. காலங்காலமான சம்பளப் பிரச்சினை, தொழிலாளர் - நிர்வாக முரண்பாடுகள், தொழிலாளர் - தொழிற்சங்க முரண்பாடுகள், கட்சிகளுக்கிடையிலான முரண்பாடுகள் என்று அனைத்தும் இறுதியாக தொழிலாளர் தலையிலேயே சுமத்தப்படுகின்றன. வரலாற்று ரீதியாக நோக்கும் போது இவ்வாறான முரண்பாடுகள் அனைத்திலும் தொழிலாளர்களே பாதிக்கப்ட்டுள்ளனர். தொழிலாளர்களுக்கான உரிமைகளுக்காக போராடி தூக்கு தண்டனை பெற்ற மலையக தியாகிகள் தொடக்கம் ஓல்டன் தோட்டத்திலிருந்து சிறை சென்ற தொழிலாளர்கள் வரை இது தொடர்கின்றது. இதனை வெறுமனே பருவகால பிரச்சினைகளாக மாத்திரமின்றி மலையக சமூகத்தின் அபிவிருத்தி நகர்வுகளுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.
சம்பள அதிகரிப்புக்காக முன்னெடுக்கப்பட்ட வேலை நிறுத்தத்துடன் ஆரம்பிக்கப்பட்ட ஓல்டன் பிரச்சினையானது தவறான வழிகாட்டல்களுடன் முன்னெடுக்கப்பட்டமை தெளிவாக புலப்படுகின்றது. வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்படும் காலப்பகுதியில் தேயிலைத்தூளை கொண்டு செல்ல முற்பட்டதால் நிர்வாகத்துக்கும் தொழிலாளர்களுக்கும் கருத்து முரண்பாடு ஏற்பட்டு அது இன்று நீதிமன்றத்தில் வந்து நிற்கின்றது. இதற்கு பொறுப்பான தொழிற்சங்கங்களோ உரிமை சார்ந்த அமைப்புக்களோ இருபுறமும் நடந்தவற்றை மறுபரிசீலனை செய்யும் நிலைமையில் இல்லை. அதேப்போல் இவ்வாறான ஒரு பிரச்சினை இன்றைய நிலையில் உருவாவதற்கு காரணமான எமது கட்டமைப்பை நாம் கூர்ந்து அவதானிக்க வேண்டும்.
அபிவிருத்தியடைந்து வரும் ஒரு சமூகமாக மலையக மக்கள் இவ்வாறான வன்முறைகளில் ஈடுபடுவது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. இவ்வாறான ஒரு நிலைமையானது எம்மை பற்றி ஏனைய சமூகத்தினர் கொண்டுள்ள மனப்பான்மையை மேலும் மோசமானதாக்கும். சம்பவம் இடம்பெற்ற சந்தர்ப்பங்களில் பதிவு செய்யப்பட்ட காணொளிகள் ஊடாக எமது சமூகத்தை மதிப்பீடு செய்யும் நிலை தோன்றலாம். பெரும்பான்மையின ஊடகங்கள் இந்த பிரச்சினையை பெருந்தோட்ட மக்கள் வன்முறையாளர்களாக சித்தரிக்கப்படக்கூடிய நிலைமையும் இன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது எமது சமூக முன்னகர்வில் பாரிய பின்னடைவாகும்.
கல்வியிலும், சமூக நிலையிலும் முன்னேற்றம் கண்டு வரும் நாம் இவ்வாறான முரண்பாடுகளையும் நடத்தையையும் கொண்டவர்களாக காட்டப்படுவது பிற சமூகத்தவர்கள் எம்மை பிற்போக்கு சமூகமாக பார்ப்பதற்கு காரணமாக அமைந்துவிட்டன. 150 வருட பாரம்பரியத்தை கொண்ட தேயிலை தொழிற்துறையானது இன்றுவரை கட்டமைக்கப்படாத ஒரு நிலையில் இருப்பது இதன் மூலம் தெளிவாக புலப்படுகின்றது. சம்பள பிரச்சினைக்கு ஒரு பொறிமுறைகள் இல்லாமை, மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு உத்தரவாதம் இன்மை, முரண்பாட்டு தீர்வு பொறிமுறைகள் கட்டமைக்கப்படாமை என்பன இன்று நேற்றல்ல, காலங்காலமாக இச்சமூகத்தில் காணப்படும் குறைபாடுகளாகும்.
இவ்வாறான ஒரு பின்புலமே இன்று மக்கள் நேரடியாக பாதிக்கப்படுவதற்கும், உரிமைகள் மறுக்கப்படுவதற்கும் காரணமாக உள்ளது. மலையக மக்களின் பிரதிநிதித்துவத்தை கொண்ட தொழிற்சங்கத் தலைமைகளே இவ்விடயங்களுக்கு முழுமையான பொறுப்பேற்க வேண்டும். ஒரு வேலைநிறுத்தத்தை அறிவிப்பதென்றால் அதில் பின்பற்றப்படும் நடைமுறைகள் தொடர்பாக கம்பனிகளுடன் தெளிவான புரிந்துணர்வுகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அதேப்போல் தொழிலாளர்களையும் தெளிவுபடுத்த வேண்டியது அவர்களின் கடமை. இவ்வாறான முறைமைகள் இதுவரைக் காலமும் பெருந்தோட்ட கைத்தொழில் துறையில் காணப்படும் சவால்களாக உள்ளன. எனவே எதிர்காலத்திலும் மக்கள் பாதிக்கப்படும் இவ்வாறான சூழ்நிலைகள் தோன்றுவதற்கு வாய்ப்புகள் உண்டு. இதனை இம்மக்கள் சார்பாக இயங்கும் அனைவரும் கருத்திற் கொள்ள வேண்டும்.
பெருந்தோட்ட தொழிலாளர்களின் கல்விமட்டம் இவ்விடத்தில் முக்கிய பேசுபொருளாகியுள்ளது. வரலாற்றை எடுத்துப் பார்த்தால் இலங்கையில் பெரும்பாலான சட்டங்கள் தோட்டத்தொழிலாளர்களை கட்டுப்படுத்துவதற்காகவே கொண்டு வரப்பட்டுள்ளன. ஆரம்பக்காலத்தில் தொழிலாளர்கள் குறைவான கல்விமட்டத்துடன் காணப்பட்டாலும் இன்னும் அதேவாறான போராட்ட அணுகுமுறைகளை கையாள்வதன் ஊடாக அவர்களின் தொழிற்துறை இன்றுவரை பாதுகாப்பற்றதாகவே இருந்து வருகின்றது என்பது புலப்படுகின்றது. குறிப்பாக தொழிலாளர் நிர்வாக முரண்பாடுகளை எடுத்துக்கொண்டால் பல்வேறு போராட்ட வடிவங்களில் தமது எதிர்ப்பை தொழிலாளர்கள் வெளிப்படுத்தியிருப்பதை உணர முடியும்.
ஆனால் முறைமைப்படுத்தபடாமலிருந்த தொழிலாளர் போராட்டங்கள் 1931 இல் கோ. நடேசய்யர் தொழிற்சங்கத்தை ஆரம்பித்தவுடன் நிறுவனமயமாகியது. அதன் தொடர்ச்சியாக இன்று உள்ள தொழிற்சங்க கட்டமைப்புகள் அமைந்திருக்கின்றன. கோ. நடேசய்யரின் தொழிற்சங்க உருவாக்கத்தை தொடர்ந்து தொழிலாளர் போராட்டங்கள் போர்க்குணம் மிகுந்தவையாக மாற்றம் பெற்றன. பல்வேறு சந்தர்ப்பங்களில் தொழிலாளர்களுக்கும் நிர்வாகத்துக்கும் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. இதன்போது தொழிலாளர்கள் தாக்கப்பட்ட சந்தர்ப்பங்களும் துரைமார் தாக்கப்பட்ட சந்தர்ப்பங்களும் இடம்பெற்றுள்ளன. இவை நீதிமன்றம் வரை சென்ற வரலாறுகளும் உள்ளன. 1915 ஆம் ஆண்டு 577 பேருக்கு 11ஆம் இலக்க கட்டளைச்சட்டத்தின் கீழ் வேலை செய்;ய மறுத்தனர் என்ற குற்றச்சாட்டில் நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
காலனித்துவ ஆட்சியாளர்களால் இலங்கை தேயிலை தோட்டத்தொழிலாளர்கள் கூலிகளாக நடத்தப்பட்டனர் என்ற ரீதியில் அடிமைகளாக அவர்களை தமது இஸ்டத்துக்கு வதைத்தனர். வேலைக்கு செல்லாத பெண்களை சிறையிலிடுவதற்கான சட்டங்கள் கூட ஆங்கிலேயர்களின் காலனித்துவ காலத்தில் நடைமுறையில் இருந்தது. 1919 இல் இலங்கை தேசிய காங்கிரசை உருவாக்கியவர்களில் ஒருவரான சேர். பொன் அருணாச்சலம் இலங்கையில் அரசியலமைப்பு சீர்த்திருத்தம் ஒன்று கொண்டு வரப்படுமானால் தோட்ட தொழிலாளர்களுக்கு பாதகமான சட்டங்கள் திருத்தப்பட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்துள்ளார். இவ்வாறான நிலைமைகள் தொடர்ச்சியான மக்கள் போராட்டங்களில் மாற்றமடைந்து வந்திருக்கின்றன. இன்றுள்ள தொழிற்சங்கங்கள் வளர்ச்சியடைந்த ஒரு உழைக்கும் தொழிலாளர்களின் பிரதிநிதிகள் என்ற ரீதியில் முற்போக்கான அணுகுமுறைகளை கொண்டிருக்க வேண்டும். எனினும் இதன் மறுதலையாக அவை வெறுமனே சம்பள பேச்சுவார்த்தைக்கு மட்டுமே வெளிப்படுபவையாக உள்ளன. தொழில்சார் நலன்களையோ மக்களின் உரிமைசார்ந்த விடயங்களையோ சமயோசிதமான அணுகுமுறையில் கையாளும் திறன் அற்றவையாகவே உள்ளன. இவ்வாறான நிலைமையே இன்றுவரை மலையக மக்கள் அடிமைகளாக நடாத்தப்படுவதற்கு பிரதான காரணமாக அமைந்துள்ளன. பலமான தொழிற்சங்கங்கள் அற்ற காரணத்தினால் தோட்டக் கம்பனிகள் இம்மக்களை சுரண்டுவதற்கும் ஏமாற்றுவதற்கும் வசதியாக உள்ளன. ஓல்டன் சம்பவமும் இதன் அடிப்படையிலேயே இடம்பெற்றுள்ளது.
தேயிலை தொழிற்துறையின் நிர்வாக ரீதியான கட்டமைப்புகள் அனைத்தும் ஒப்பீட்டளவில் வளர்ச்சியடைந்து தான் உள்ளன. ஆனால் மக்களின் நலன் சார்ந்த விடயங்கள் இன்னும் கூட வளர்ச்சியடையவில்லை என்பதையே ஓல்டன் பிரச்சினை பிரதிபலிக்கின்றது. கடுமையான ஒடுக்குமுறைகளை எதிர்கொண்ட ஒரு சமூகம் என்ற ரீதியில் இனியும் இவ்வாறான மோசமான அனுபவங்களை எம்மக்கள் எதிர் கொள்ள முடியாது.
ஓல்டன் பிரச்சினையின் மறுபுறம் அவதானிக்கையில் தாக்கப்பட்ட தோட்ட முகாமையாளரும் உதவி முகாமையாளரும் தமிழர்கள். அந்த வகையில் பெருந்தோட்ட சேவைத்துறையில் குறைவான அளவினரே உள்ளனர். அதிலும் தோட்ட முகாமையாளர்கள் மிகவும் சொற்ப அளவினரே தற்சமயம் சேவையில் உள்ளனர். ஏனைய துறைகளை போல் பெருந்தோட்ட நிர்வாக துறைக்குள் சிறுபான்மையினர் உள்நுழைவது சிரமம் மிகுந்ததாகவும் தொழிநுட்ப ரீதியாக சவாலாகவும் உள்ளது. ஓல்டனில் நடந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு நோக்கும் போது இத்தொழிற்துறையில் நிர்வாக பதவிகளுக்கு எம்மவர்கள் பொறுத்தமில்லை என்ற முடிவுக்கு வர வாய்ப்பிருக்கின்றது. தமிழ் துரைமாரை தமிழ் மக்களே இவ்வாறு தாக்கும் சம்பவங்களை பெரும்பான்மையின ஊடகங்கள் கூட வன்முறைகளாகவே வர்ணித்;திருந்தன. அதேபோல் அங்கு சென்ற பெரும்பான்மையின தோட்ட துரைமாரையும் தாக்க முற்பட்டுள்ளனர். இது எம்மக்கள் மீது அவர்கள் கடுமையான போக்குகளை வெளிப்படுத்த காரணமாக அமையும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
இவ்வாறு பெருந்தோட்டத்துறை முரண்பாடுகள் மிகுந்ததாக பராமரிக்கப்படுவது சுயலாப அரசியல் நோக்கங்களுக்காகவே ஆகும். குறிப்பாக தொழிற்சங்க அரசியல் செய்யும் மலையக கட்சிகளுக்கு இவ்வாறான முரண்பாடுகள் தம்மை பெருந்தோட்ட மக்கள் தீர்வுகளாக தேடுவதற்கு அடிப்படையாக அமைகின்றன. இதன் மூலம் அவர்களுக்கு ஊடக வெளிச்சம் கிடைக்கின்றது. எனவே தோட்டங்களில் நடக்கும் பிரச்சினைகளை தீர்க்கும் மூன்றாம் தரப்பாக அவர்கள் தமது அரசியலை மேற்கொள்ளுகின்றனர். இந்திய பாணியிலான அரசியல் செய்வதற்கும் தம்மை அரசியல்வாதிகள் மீட்பர்களாக காட்டிக்கொள்வதற்கும் பெருந்தோட்டங்களில் நிலவும் இவ்வாறான கலாசாரங்களே காரணமாகும். தமக்கு லாபமில்லாத அல்லது நெருக்கடி ஏற்படும் நிலைமைகளை அரசியல்வாதிகள் கையாள்வதில்லை. சிறையிலிடப்பட்டிருக்கும் ஓல்டன் தோட்டத் தொழிலாளர்கள் விடயத்திலும் இது தான் நடந்தது. கடந்த வாரம் தோட்டத்துரைமார் தமது பாதுகாப்பிற்கு துப்பாக்கி வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்ததை ஊடகங்கள் வாயிலாக அறிய முடிந்தது. இது ஏதோ விலங்கு பண்ணை நடாத்துவதைப் போல பெருந்தோட்ட மக்கள் எண்ணப்படும் நிலையை பறை சாற்றுகின்றது. இவ்வாறான சந்தர்ப்பங்களை இம்மக்களிடம் சந்தா பெற்று சீவனம் நடத்தும் தொழிற்சங்கங்களும், அரசியல்வாதிகளும் பொறுப்பேற்க வேண்டும். இல்லையேல் எதிர்காலத்தில் இதைவிட மோசமான அனுபவங்களை நாம் எதிர்கொள்ள வேண்டும்.
Comments
Post a Comment