பெருந்தோட்டத்துறையில் மேலோங்கும்
பெரும்பான்மையினரின் கை
அருள்கார்க்கி
பெருந்தோட்டத்துறை ஆரம்பம் முதல் இன்று வரை எம்மினம் தேயிலைத் தொழில்
துறையின் உயிர்நாடியாக விளங்குகின்றது. காடுகளை அழித்து தேயிலை பயிரிட்டது முதல்
சந்தாப்பணம் கட்டி ஏமாந்தது வரையில் எம்மினத்தை இத்தொழில் துறையுடன்
பிரிக்கமுடியாத பிணைப்பு காணப்படுகின்றது. ஆயினும் இந்நாள் வரையில் அடிமை
வாழ்க்கையே எமக்கு மிச்சம் எனக் கூறுமளவிற்கு வெறும் கூலிகளாகவே எம்மை
ஸ்தீரப்படுத்தி வைத்திருக்கும் அரசியல் நோக்கம் இலகுவில் விளங்கிக்கொள்ள முடியாதது.
ஆரம்பத்தில் ஆங்கிலேயனுக்கு அடிமைச் சேவகம் செய்தோம். ஆனால் இன்று பெருபான்மை
இனத்தின் முதலாளிகளுக்கு அடிமைச் சேவகம் செய்கின்றோம். குறிப்பாக எம்மினம்
கல்வியில் முன்னேற்றம் காணும் இவ்வேலையில் எம்மை ஆக்கிரமிக்கும் நுண்ணரசியல் தான்
இது.
ஆங்கிலேயரின் காலத்திற்குப் பின்னர் பெருந்தோட்டத்துறையை கையேற்ற அரசும், தனியார்
துறையும் மலையக மக்களை வெறும் கூலிகளாக மட்டுமே நடத்தியுள்ளமையும்,
பெருந்தோட்டத் துறையின் மூலம் இலாபம் அடைந்தமையும் சொல்லித்தெரிய
வேண்டியதில்லை. எனினும் இதற்கு அடிப்படையான காரணகர்த்தாவான மலையக
உழைக்கும் வர்க்கம் இன்றுவரை கைக்கட்டி சேவகம் செய்யும் நிலைமையே தொடருகின்றது.
பெருந்தோட்ட கம்பனிகள் முதல் வேலைபார்க்கும் வெளிக்கள உத்தியோகத்தர் வரையில்
அனைவருமே பெருபான்மை இனத்தை சேர்ந்தவர்களே அனேகமாக இருக்கின்றனர். எனினும்
குறிப்பிட்ட ஒரு அளவான வீதமானோர் மலையக மக்களை பிரதிநிதித்துவப் படுத்தும்
எம்மவர்களாக இருப்பினும் சிங்களவர்களின் கையே ஓங்கியிருக்கின்றது. மலையக மக்கள்
அனைவரையும் அரசியல் ரீதியாக பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகள்
இவ்விடயங்களை பெரிதாக எடுப்பதில்லை. நாம் அனைவரும் பட்டதாரிகளாக ஆவதற்கு
ஓடிக்கொண்டிருக்கும் போது சாதாரண தரம் சித்தியடையாத சிங்கள இளைஞர், யுவதிகள்
பெருந்தோட்டத்துறையுள் நுழைந்துவிட்டனர்.
கல்வி கற்ற மலையக இளைஞர், யுவதிகள் பெருந்தோட்டங்களை விட்டு வெளியேறும்
காரணத்தினாலும் தேயிலை தொழில் துறையில் காணப்படும் அதிர்ப்தி மனநிலை
காரணமாகவும் சிங்கள இனத்தவர் பெருந்தோட்ட சேவையாளர்களாக
உள்வாங்கப்படுகின்றனர். பெருந்தோட்ட தொழிற்துறையில் சேவையாளர்களாக
இணைத்துக்கொள்ளப்படுவதற்கு போட்டிப் பரீட்சை, நேர்முகத்தேர்வு போன்ற எந்த
நியமங்களும் பின்பற்றப்படாமல் காணப்படுவதால், தோட்ட முகாமையாளரை அணுகி தொழில்
பெற்றுக்கொள்கின்றனர். பின்னர் செஞ்சோற்றுக் கடன் தீர்க்க முதலாளித்துவத்துக்கு
விசுவாசமாக இருந்து எம்மவர்களின் உழைப்பைச் சுரண்டும் பணியைச் செய்வனே
செய்கின்றனர். பெருந்தோட்ட பகுதிகளில் குடியிருப்பை பெற்றுக்கொள்ளும இவர்கள்; பௌத்த
மதத்தையும் திணிப்பதையும் சூட்சுமமாக செய்கின்றனர். கம்பனிகளும் எம்மவர்களிடம்
கணிசமாக வேலை வாங்குவதற்கும், சுரண்டித்தின்பதற்கும் எம்மவர்களை விட சிங்களவர்களே
பொருத்தமானவர்கள் என இணங்கண்டுள்ளனர். இதன் காரணமாக தேயிலை
தொழில்துறையில் இவர்கள் தவிர்க்க முடியாதவர்களாகி விடுகின்றனர்.
சம்பள உயர்வுக் கோரிக்கைகளும், கூட்டு ஒப்பந்த காலப்பகுதியிலும் பெருந்தோட்ட
நிறுவனங்கள் காட்டும் நட்ட கணக்கு வழக்கிற்கு மட்டும் ஆதாரங்களை திரட்ட முடியும்.
ஆனால் தோட்ட மட்டத்தில் இடம்பெறும் வீண் செலவீனங்களை கண்டுக்கொள்வதில்லை.
குறிப்பாக தோட்ட முகாமையாளர்களுக்கான பணியாள் விபரம் வெளியில் தெரியாது.
சாதாரணமாக ஒருநாளைக்கு சுமார் 10 பேர் வரை முகாமையாளர் பங்களாவிற்கு
பயன்படுத்தப்படுகின்றனர். குறிப்பாக சமையலாள், காவலாளி, தோட்டக்காரர், வாகன
பராமரிப்பாளர், துப்பரவு பணியாளர் இவற்றுக்கு மேலதிகமாக முகாமையாளரின்
செல்லப்பிராணிகளை பராமரிப்பதற்கும் தோட்டக்கணக்கில் ஆட்கள் நியமிக்கப்படுவதுண்டு.
இதேப்போல் உதவி முகாமையாளர், தோட்ட சேவையாளர்கள் என அனைவருக்கும் சொந்த
வேலைகளை செய்துக்கொள்வதற்கு தோட்ட கணக்கில் ஆட்கள் பெற்றுக்கொள்கின்றனர்.
தமிழ் சேவையாளர்களை விடவும் பெரும்பான்மை இன சேவையாளர்கள் இவ்விடயங்களில்
மிகவும் திறமையானவர்களாக காணப்படுகின்றனர்.
படித்த, அனுபவமுள்ள எம்மவர்களுக்கு பெருந்தோட்ட சேவையாளர்களாக ஏன் நியமனம்
கொடுக்க முடியாது? அதுபோக எம்மவர்களிடம் காணப்படும் உதாசீன போக்கும், ஆசிரியர்
தொழில் மோகமும் ஏனைய அனைத்து தொழில் மீதும் ஒரு புறக்கணிப்பை
ஏற்ப்படுத்துகின்றது. நகர்ப்புறங்களில் சென்று வியாபார நிலையங்களில் இரவு பகலாக
உழைக்க முடியுமென்றால் பெருந்தோட்ட சேவையாளர்களாக ஏன் தொழில்புரிய முடியாது
என்ற கேள்வி எழுகின்றது.
குறிப்பாக குடும்பநல சேவகர், ஆரம்ப பிள்ளை நிலைய பொறுப்பாளர்கள், சாரதிகள்,
வெளிக்கள உத்தியோகத்தவர்கள், அலுவலக பணியாளர்கள் என நிறுவனமயப்பட்ட தொழில்
துறைகளில் தோட்டங்களுக்கு வெளியில் பணிபுரிய முடியுமென்றால் பெருந்தோட்டத்திலும்
அதனை செய்யமுடியும் நிலைமை இல்லாமலில்லை. மறுபுறம் மலையக இளைஞர்,
யுவதிகளை திசைமுகப்படுத்தும் எந்தவொரு நிறுவனமயப்பட்ட நடவடிக்கையும்
இல்லாதிருப்பதன் விளைவுகள் தான் இவை.
பெரும்பான்மை இனத்தவரைப் பொருத்தவரையில் ஒருவர் உள்நுழைந்து விட்டால் அவரை
பின்தொடர்ந்து அவரின் உறவினர்களும், நண்பர்களும் வந்து தொழில் பெற்றுக் கொள்ளும்
நடைமுறையும் காணப்படுகின்றது. தோட்டத்துறையே நியமனம் வழங்கும் நபராதலால் இதனை
அவர்கள் இலகுவாகச் சாதித்துக் கொள்கின்றனர்.
இவற்றுக்கெல்லாம் மேலதிகமாக இவ்வாறு தந்திரமாக பெருந்தோட்டத்திற்குள் நுழையும்
இவர்கள், தங்கள் குடியிருப்புகளை அங்கேயே அமைத்துக் கொண்டு தங்கிவிடுகின்றனர்.
பின்னர் பல்கிப் பெருகி ஒரு கிராமத்தின் கட்டமைப்பை கொண்டுவருகின்றனர். அதுமட்டுமின்றி
பல்வேறு பெருந்தோட்டங்களில் சிறிpதாக ஆரம்பமான அசம்பாவிதங்கள் இவர்கள் மூலம்
இனவாத நோக்குடன் முன்கொண்டுச் செல்லப்பட்ட வரலாறுகளும் உண்டு. எனவே மலையக
சமூகம் விழிப்பாக இருக்க வேண்டும். இல்லையேல் எம்மை நாடற்றவர்களாக ஆக்குவதற்கு
அதிக நேரம் போகாது. வடக்கில் இடம்பெறும் சிங்களக் குடியேற்றங்கள் இதற்கு மிகச்சிறந்த
உதாரணங்கள்.
மலையகம் எனப்படுவது எமது பூர்வீக நிலம். நாம் அசட்டையாக இருந்தால் சிங்களப்
பேரினவாதம் எம்மை இருந்த இடம் தெரியாமல் ஓரங்கட்டி விடும். வடகிழக்கில் தமிழர்களின்
நிலங்களை ஆக்கிரமித்தது. சிங்களக் குடியேற்றங்களை உருவாக்கியது. அரச
நியமனங்களை சிங்களவர்களுக்கு வழங்கியது போன்ற தேசிய வேலைத்திட்டங்களுக்கு
மலையகமும் உட்ப்படும் நிலைவரும் நாள் தொலைவிலில்லை.
எம்மவர்களால் செய்யமுடியாத தொழில் என்று எதுவுமில்லை. எமக்கான வாய்புகள்
கிடைக்கும் பட்சத்தில் அதனைச் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எமது அரசியல்
பலத்தைக் கொண்டு தேயிலைத் தொழில்துறையை நவீனப்படுத்த முடியுமெனில் அது
இளைஞர்களை இத்துறைக்கு ஈர்க்க வாய்ப்பாக இருக்கும். இந்நாட்டின் தேசிய வருமானத்தில்
கணிசமான பங்களிப்பை வழங்கும் தொழில்துறையில் எமது பங்களிப்பு அனைத்து
மட்டத்திலும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
Comments
Post a Comment